எல்லா தினமுமே உங்கள் தினம் தான் அப்பா..

எல்லா தினமுமே உங்கள்  தினம் தான் அப்பா..

இறக்கி வைக்காமல் இடைவிடாமல் இதயத்தில் எப்போதும் என்னை சுமந்த என் அப்பாவிற்கு ..

அனுதினமும் அந்த அன்பை இன்னமும் தேடும் ப்ரிய மகளின் கடிதம்.

நீங்கள் தந்த உயிர்.. நீங்கள் தந்த சதை.. நீங்கள் தந்த ரத்தம்.. உங்களை நினைவூட்டி போகும் என் முகம்..

நீங்கள் தந்த அறிவு.. நீங்கள் தந்த தமிழ்.. நீங்கள் தொடங்கி வைத்த ஞான வேட்கை.. எல்லாம் ஒன்றிணைந்து தானே நான் உருவாகி இருக்கிறேன்.

உங்கள் விரல் பிடித்து நடந்த மழலை காலங்கள்.. உங்கள் பின் அமர்ந்து சென்ற சைக்கிள் பயணங்கள்.. உங்கள் உள்ளங்கைகளின் கதகதப்பில் உறங்கிய இரவுகள்.. உங்கள் ப்ரியத்தில் நனைந்திருந்த என் சிறுபிராயம்.. அத்தோடே என் ஆயுள் முடிந்திருக்கலாம்.

சில சமயம் காலத்தின் கணக்குகள் நமக்குத் தவறான விடைகளை பரிசளிக்கின்றன.மிகுந்த சிரமத்துக்கிடையே நரம்புகளை பிழிந்து போடப்படும் கணக்குகளின் படிகள் எல்லாம் பல சமயங்களில் பிழைகளை நோக்கியே பயணிக்கின்றன.

சிறுமியாய் இருந்த என் சிறுபிராயத்தின் வளர்ச்சி ஒரு பெரும் பிழையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. என் மீதான நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருந்தது அப்பா. ஆனால் நான்தான் என்னை சரியாக மதிப்பிடாமல் போய் விட்டேன்.

உங்களோடான என் காலங்களின் ஒவ்வொரு கணமும் பேரன்பின் முழுமையால் தன்னை நிறைத்துக் கொண்டிருந்தன. உங்களுக்கு நான் தந்த வலிகளுக்கெல்லாம் எப்போதும் மகிழ்வை மட்டுமே எனக்கு நீங்கள் பரிசாக்கி இருக்கிறீர்கள்.

பெண்மை என்பதெல்லாம் வெறும் சமையலறை பதுமையாக இருந்த காலங்கள் அவை. அப்போது என்னை அதில் இருந்து நகர்த்தி எனக்கான சுதந்திரத்தை தந்தீர்கள். எல்லா தகப்பன்களை போலவும் உங்கள் வாழ்க்கை இருந்ததில்லை. மகள்கள் இருவருக்கும் நீங்கள் தந்த சுதந்திரம் ஒரு நாள் உங்கள் நிம்மதியை விலை பேசியது.

எனக்கு சுதந்திரம் தந்து என் பருவ காலத்தில் என்னை பட்டாம்பூச்சியாக்கி பறக்க வைத்தீர்கள்.. நம் ப்ரியத்தின் மீதான நம்பிக்கையில் நான் மீண்டும் உங்கள் கைகளில் வந்தமர்வேன் என்று நீங்கள் நிஜமாய் நம்பினீர்கள். ஆனால் சுதந்திர சிறகை விரித்த நான் திரும்ப வராமலே பறந்து போனேன்..

அப்போதும் என் அப்பா நீங்கள் கலங்கியதில்லை. நிம்மதியற்ற வாழ்விலும் நித்யம் புன்னகை செய்தீர்கள் அப்பா. அந்த புன்னகைக்கு நான் எப்போதும் அடிமை. அந்த புன்னகையை எனக்குள்ளும் கடத்தியது உங்கள் பெரும் கருணையா இல்லை வெறும் மரபணுவா என்பதில் எனக்கு குழப்பங்கள் இருந்ததில்லை.

இயற்கையின் வளம் நிறைந்த ஒரு நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அந்த ஊரில்.. தைரியத்தின் உதாரணமாக என்னை ஆளாக்கினீர்கள். உங்கள் கையெழுத்து என் உயிர் அப்பா. உங்களை நான் வெகு அருகே இருந்து பார்த்திருக்கிறேன். ஆழ்மனதில் பதிந்து போன உங்கள் செயல்கள் எல்லாம் அன்று என் மேல் மனதில் பதியாமல் போனது என் பாவத்தின் காரணமாகவே இருக்க கூடும்.

நேசத்தை வெளியே சொல்ல தெரியாமல் உள்ளேயே ஒளித்து வைத்திருந்த மனம் திரும்பி வர முடியாத தூரத்திற்கு நீங்கள் சென்றபின்னர் அனுதினமும் அதன் நேசத்தை என்னிடம் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது.

அருகில் இருக்கும்போது அருமை தெரியாத உறவுகளில் முதல் உறவு அப்பா என்பது என் எண்ணம். எப்போதும் என்னோடு நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் அலட்சியமாக நினைத்து விட்டேன். அது தவறாக போயிற்று அப்பா.

என்னை பாதுகாத்த பசும் சோலையை புறக்கணித்து பாலைவனம் நோக்கி நான் பயணமானேன். அப்போதாவது நீங்கள் உங்கள் வலிமையால் என்னை தடுத்திருக்கலாம். வாழ்வெனும் அனுபவம் உங்கள் அன்பை எனக்கு புரியவைக்கும் என்றுணர்ந்த நீங்கள் என்னை அமைதியாகவே வழியனுப்பி வைத்தீர்கள்.

அப்போது கூட எனக்கு தெரியாது அப்பா.. என் பயணம் பாதாளம் நோக்கியது என்று. பயணிக்க பயணிக்க பயம் வந்தது அப்பா. ஆனாலும் உங்களிடம் பகிர மனதில்லை. வலிகள் நிறைந்த உங்கள் மனதை நிம்மதியால் நிரம்ப வைத்தது என் பொய்கள்.

பொய்மையும் வாய்மையிடத்த என்று நமக்கு சொல்லிப்போன தெய்வப்புலவரை இப்போதும் வணங்குகிறேன். நான் சௌக்கியமாக இருப்பதாகவே உங்களை நம்ப வைத்தது மட்டுமே நான் செய்த ஒரே நன்மை.

உங்கள் ஆயுள்காலம் பற்றி முன்பே அறிந்திருந்த நீங்கள் கடைசி நேர சிரமங்களை கூட எனக்கு தரவே இல்லை. கடைசியாய் என் முகம் பார்க்க கூட உங்களுக்கு காலம் தரப்படவில்லை. எல்லாம் முடிந்த பின்னரே நான் வந்து சேர்ந்தேன்.

அப்போதும் அமைதியாய் உங்களை நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள். உங்கள் மேல் மாலையாகி இருந்த பன்னீர் ரோஜாக்களின் வாசனையை என் நியூரான்கள் எப்போதும் மறக்க போவதில்லை. வாசனைகள் உங்களுக்கு பிடித்தமானவை அப்பா. உங்கள் மேல் விபூதி வாசம் இருந்தது. சந்தன வாசம் இருந்தது. உறைந்து போன அமைதியை அன்றுதான் உங்கள் முகத்தில் பார்த்தேன் அப்பா .நீலமாகி கொண்டிருந்த உங்கள் விரல்களை நான் பற்றி கொள்கையில்.. எனக்குள் எங்கோ தொலைந்து போயிருந்த உங்கள் மகள் வந்தமர்ந்தாள்.

உங்கள் செல்ல மகள் வந்தமர்ந்த போதுதான் அவள் அப்பாவை தொலைத்தது அவளுக்கு உறைத்தது. பயத்தில் இன்னமும் இறுக பற்றிக் கொள்கிறேன் உங்கள் நீல விரல்களை.. பதிலுக்கு அணைத்து கொள்ளாமல் அப்பா நீங்கள் அப்படியே அமர்ந்திருந்தீர்கள்.. நெஞ்சு பிசைய கண்கள்மூடி உங்கள் மடியில் சாய்ந்து கொண்டது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா அப்பா..

சடங்குகள் செய்த கடைசி நிமிடங்கள்.. இன்னும் சில நிமிடத்தில் என்னை விட்டு நீங்கள் போயாக வேண்டும். அன்றொரு நாள் உங்களை பிரிந்த என் பயணத்தை நீங்கள் அமைதியாகவே ஏற்று கொண்டது நினைவில் இருக்கிறது. உங்களை பலகையில் படுக்க வைத்திருந்தார்கள். கன்னங்களில் உலர்ந்து கிடந்த கண்ணீர் தடங்கள் யதார்த்தத்தை உணர்த்தியது. அந்த கடைசி நொடிகளில் உங்கள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டேன். so long friend போகும் இடமாவது உங்களுக்கு சுகமாயிருக்க வேண்டும் என்று சொன்னேன் உங்களுக்கு அது தெரியுமா அப்பா..

இறக்கும் கடைசி நொடி வரை என்னுடைய தோழனாக இருக்கவே நீங்கள் விரும்பினீர்கள் நானோ.. உங்களுக்கு மகளாக மட்டுமே இருந்திருக்கிறேன் அப்பா.

நமக்கான நிமிடங்கள்.. நமக்கான நாட்கள்.. நமதான மழைப்பொழுதுகள்.. நமதான பயணங்கள்... இயற்கையோடு இருந்த நம் இதயங்கள்.. இப்போதுதான் நான் உணர்கிறேன் அப்பா. எனக்கு எதையும் நீங்கள் சொல்லித் தர முயன்றதே இல்லை. வாழ்ந்து காட்டினீர்கள். உங்களை கவனித்தே வளர்ந்த என் ஆழ்மனது இப்போது நான் என்பதை நீங்களாகவே மாற்றி இருக்கிறது.

நீங்கள் கற்று கொடுத்த வாசிப்பு.. நீங்கள் கைபிடித்து அழைத்து போன சினிமாக்கள்.. நீங்கள் சொல்லி கொடுத்த தமிழ்.. நீங்கள் அறிமுகம் செய்த இசை.. நீங்கள் எழுதி தீர்த்த கவிதைகளில் மிஞ்சிய வார்த்தைகளே என் இப்போதைய எழுத்தாகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரிவிக்க இந்த கடிதம் உதவியிருக்கிறது. நான் என்பதன் அஸ்திவாரம் மட்டுமல்ல மொத்தமுமே நீங்கள் தான் அப்பா.

இதை நான் உங்களிடம் சொல்லும் சமயம் நீங்கள் என்னோடு இல்லை. எங்காவது இருந்து இதனை படிப்பீர்கள் என்று மட்டுமே உணர்கிறேன். அந்த நம்பிக்கை என்னை இன்னும் கொஞ்ச காலங்கள் உங்கள் நினைவோடு வாழ வைக்கும்.

செய்து முடித்தாக வேண்டிய பொறுப்புகள் இன்னும் மீதம் இருக்கிறது. என் முன் மாதிரி நீங்கள்தான் அப்பா, கடமைகளை பலன் எதிர்பாராமல் நிறைவேற்றிய உங்கள் நேசத்தை பின் தொடர்கிறேன் நானும்.

பின்பொரு நாள் எனக்காக அங்கே காத்திருங்கள் அப்பா.. விட்டுப் போன பந்தத்தை நாம் வேறொரு இடத்தில் இடைவிடாமல் தொடர்வோம். இம்முறை உங்களை நான் பிரியவே மாட்டேன் அப்பா.

மிஸ் யூ அப்பா.

 

Dedicated to my beloved father.. Salute to all Fathers.. The one person who will always love us even when we dont recognize their love.

---

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன