மற்றவர் நம்மை நேசிக்கவில்லை மற்றவர் நம் மீது அக்கறையோடு நடந்து கொள்ளவில்லை மற்றவர் நமது குறைகளை மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல உலகில் நமக்குத் துன்பம் ஏற்படுவதே மற்றவர்களால் மட்டும் தான் என்பது போன்ற ஒரு மாயையில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
உண்மையில் மற்றவரை விடுங்கள், நம்மை நாம் நேசிக்கிறோமா? நம்மைக் கருணையோடு அணுகுகிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்கிற பதில்தான் நமக்கு கிடைக்கிறது.
அழுத்தங்கள் நிறைந்த இந்த உலகில் வாழ நமக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதில் ஒன்றுதான் நம்மை நாமே கருணையோடு எப்படி அணுகலாம் என்பதுவும். (self compassion)
அடிக்கடி நம்மை நாமே குறை கூறிக் கொள்கிறோம், நாம் நன்றாக வேலை செய்யவில்லை, எதற்குமே லாயக்கில்லை , யார் என்ன சொன்னாலும் பதிலுக்கு பேசுவதேயில்லை என தோல்விகளுக்கு ஒரு அடையாளமாக நம்மை நாமே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் இது பரிதாபகரமானதுதான். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது முழுக்க முழுக்க நாம் மட்டுமே தானா? நிச்சயமாக இல்லை. சூழ்நிலைகள், உடன் பழகுபவரின் துரோகங்கள், தங்கள் தவறுக்கெல்லாம் உங்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு போகும் சுயநல மனிதர்கள், பணியிடத்தில் தனது வேலையை மற்றவர் தலைமேல் கட்டிவிட்டு சும்மா சம்பளம் வாங்கும் சில அட்டை பூச்சி மனிதர்கள் இது போன்ற பல சூழ்நிலைகளால் மனிதர்களால் தான் நமது செயல் தவறாகப் போயிருக்கிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலும் மக்கள் சுயபச்சாதாபத்தையும் சுய கருணையையும் ஒன்றாக நினைத்துக் கொண்டு குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் நிச்சயமாக வேற்றுமை இருக்கிறது.
மன அழுத்தம், சுய வெறுப்பு ஆகியவை நம் நல்வாழ்க்கையில் இரண்டு முக்கிய எதிரிகள். ஒரு ஆரோக்கியமான அற்புதமான வாழ்வை நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்பினால் சுய கருணை என்பது அவசியம் தேவை.
சுய கருணை என்பதை நாம் எப்படி உருவாக்கலாம் என்பதற்கான 6 குறிப்புகள் உங்களுக்காக.
1. வெற்றி எனும் தாரக மந்திரத்தை முணுமுணுக்கும் நமக்கு அதனை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. நாம் நிர்ணயித்த இலக்குகளை நம்மால் அடைய முடியாவிட்டால் நம்மை நாமே தோல்வியாளர் என்று நினைத்துக் கொள்கிறோம்,. ஆனால் நமது தோல்விகளை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் செல்ல வேண்டியது அவசியம்.
2. தோல்வி என்பது நமக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது தனித்துவமானதும் அல்ல. நாம் குறைகளுடைய மனிதர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நேர்த்தியான மனிதர் என்று யாருமே இல்லை. உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகளுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டு அவர்களை போல நாம் இல்லை என்று நினைத்து வருந்தாதீர்கள். நாம் அவர்களை போல் இருப்பதற்காகப் பிறக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போன்ற வேலையை செய்ய நாம் படைக்கப்படவில்லை.
3. தன்னைத் தானே கடுமையாக விமர்சித்துக் கொள்ளும் மனிதர்கள் அதிர்ஷ்டம் என்பது இந்த உலகில் இருக்கவில்லை என்றே நம்புகிறார்கள். வெற்றியாளர்களை பார்க்கும்போது அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று கூறி கொள்கிறோம். ஆனால் அப்படி அல்ல. ஆரம்பம் முதல் முடிவு வரை தனது எல்லா செயல்களுக்கும் தானே பொறுப்பாளி ஆகியவர் எவரோ அவர்தான் உண்மையான வெற்றியாளர். சில சமயங்களில் சில விஷயங்கள் நம் கை மீறிப் போகலாம் அது நம் தவறல்ல. இது இயல்பான ஒன்றுதான்.
4. நீங்கள் செய்யும் சாதனைகளை வைத்துத்தான் உங்களை நீங்கள் எடை போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் உள்ள பொருள்கள், பணம், நம்மிடம் உள்ள கல்வித் தகுதி போன்றவை எல்லாம் சிறு துகள்தான். இதனைத் தாண்டிய பல சாதனைகள் இருக்கின்றன. உங்களை நேசிக்கும் மனிதரிடம் கேட்டு பாருங்கள் உங்களிடம் உள்ள டிகிரி சர்டிபிகேட்டிற்காகவா அவர் உங்களை நேசிக்கிறார் என்று? உங்களை நேசிப்பவர்கள் உங்களை பற்றிக் கூறும் விஷயங்களை நினைத்துப் பாருங்கள். இது உங்களுக்குத் புதிய பரிணாமத்தைக் கொடுக்கும்.
5. இதனை எல்லாம் பார்க்கும் போது இதெல்லாம் முடிகிற விஷயமா என்று உங்களுக்குத் தோன்றலாம். தினமும் ஒவ்வொரு நாளையும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தொடங்குங்கள். பூஜயத்தில் இருந்து ஆரம்பிக்கும் எதுவும் பூரணமாகும்.
6. இதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது நன்கு இளைப்பாறுவதுதான். எல்லாவற்றில் இருந்தும் ஒரு சின்ன இடைவெளி விடுங்கள். நெருக்கடியான சூழலில் இருந்து உங்கள் மனதைத் தளர விடுங்கள். உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவர் தான்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.