மார்பக புற்று நோய் எவ்வாறு பரிசோதிப்பது? அதன் அறிகுறிகள்!

மார்பக புற்று நோய் எவ்வாறு பரிசோதிப்பது? அதன் அறிகுறிகள்!

மார்பக புற்று நோய்(breast cancer) என்றால் என்ன?
மார்பக புற்று நோய்(breast cancer) உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு இதனால் வரலாம்.


மார்பகச்(breast cancer) சுயபரிசோதனை (Breast self-examination):
பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


சில குறிப்புகள்:
நீங்கள் சுயமாகப் பரிசோதனை செய்யத் தொடங்கும்போது சரியாகப் பரிசோதிக்கிறோமா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், தொடர்ந்து பரிசோதனை செய்து வரும்போது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மிகவும் எளிதாகக் கண்டு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.


மாதம் ஒருமுறை செய்வது அவசியம்.


மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு செய்தால், அசௌகரியம் இல்லாமல் இருக்கும்.


மாதவிடாய் நின்றவர்கள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து பரிசோதனை செய்யவும்.


மார்பகம் மட்டுமின்றி அக்குள் பகுதிகளையும் பரிசோதிக்கவும்.


மார்பகப் புற்று நோய்(breast cancer) அறிகுறிகள் (Breast Cancer Symptoms):


சுயபரிசோதனையின்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை:
மார்பகம், அக்குள் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?


மாற்றம் ஏற்பட்டிருந்தால், இது தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கிறதா?


இயற்கையாகவே நாளமில்லாச் சுரப்பிகளினால் ஒவ்வொரு மாதமும் மார்பகங்களில் சுழற்சியாக மாற்றங்கள் ஏற்படும். தொடர் பரிசோதனை மூலம் இயற்கையாக நிகழும் மாற்றத்துக்கும், புதிதாகத் தோன்றியுள்ள மாற்றங்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.


மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசம் தொடர்ந்து கவனித்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.


இச்செய்தியினை மற்ற பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தவறாமல் தொடர்ந்து பரிசோதனை செய்து பயன்பெறவும்.


மார்பகச் சுய பரிசோதனை(breast cancer) செய்துகொள்வதற்கான 5 படிகள்: (மாதம் ஒரு முறை)
படி 1: கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தோள்பட்டையை நேராகவும், கைகளை இடுப்பிலும் வைத்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் பரிசோதிக்க வேண்டியது:
மார்பகங்கள் வழக்கமான அளவிலும், வடிவிலும், நிறத்திலும் இருக்கிறதா?
வீக்கம் போன்றவை இல்லாமல் மார்பகங்கள் சரியான வடிவத்துடன் இருக்கிறதா?
கீழ்க்கண்ட மாற்றங்கள் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.
மார்பகத்தின் தோல் பகுதியில் சுருக்கம் அல்லது வீக்கம் முலைக்காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருத்தல் மார்பகங்களில் புண், வலி, சிகப்பு நிறம், தடிப்பு ஆகியவை இருத்தல்.


படி 2: இப்போது உங்கள் கைகளை உயர்த்திக்கொண்டு மேற் சொன்னவாறு அனைத்தையும் மீண்டும் கவனியுங்கள்.

படி 3: கண்ணாடி முன் நின்று கொண்டு முலைக் காம்புகளில் ரத்தம் அல்லது நீர் அல்லது பால் அல்லது மஞ்சள் நிறத் திரவம் வெளிப்படுகிறதா எனக் கவனிக்கவும்


படி 4: படுத்துக்கொண்டு வலது கையினால் இடது மார்பையும் இடது கையினால் வலது மார்பையும் கீழ்க்கண்டவாறு பரிசோதிக்கவும்.


விரல்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு விரல் நுனிகளால் படத்தில் உள்ளது போல் அழுத்தமாகவும் மென்மையாகவும் சிறிய வட்டங்களாக மார்பகம் முழுமையும் அழுத்திப்பார்க்கவும் (தோள்பட்டை எலும்பில் இருந்து வயிற்றின் மேல்பாகம் வரை, அக்குளில் இருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை).
முலைக்காம்பில் இருந்து ஆரம்பித்து வட்ட வடிவில் சிறிய வட்டத்தில் இருந்து பெரிய வட்டமாக மார்பகத்தின் வெளிப்புறம் வரை பரிசோதிக்கவும். மேலும், மேலிருந்து கீழாக அழுத்தித் தடவிப் பார்க்கவும். பலருக்கு இது சிறந்த முறையாகத் தோன்றும். அக்குள் மற்றும் மார்பகத்தின் எல்லாப் பகுதிகளையும் பரிசோதனை செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.


படி 5: இறுதியாக நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ மார்பகத்தை அழுத்தி தடவிப் பார்க்கவும். மார்பகம் ஈரமாக இருக்கும்போது இப்படிப் பரிசோதிப்பது பெரும்போலோருக்கு எளிதாக இருக்கலாம். எனவே குளிக்கும்போது இப்படிப் பரிசோதித்துக் கொள்ளலாம். படி 4-ல் சொன்னதுபோலவும் பரிசோதிக்கலாம்.


புற்று நோய்(breast cancer) சில அடிப்படை அறிகுறிகள்:


மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்.


மார்பகம் பகுதி தடித்து இருக்கும்.


மார்பகக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.


மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும்.


இது போன்ற அறிகுறிகள் மார்பக புற்று நோய்க்கான(breast cancer) ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும். உடனடியாக மருத்துவரை அனுகுவது மிகவும் நல்லது.