புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான 10 முக்கிய குறிப்புகள்!

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான 10 முக்கிய குறிப்புகள்!

1. நீங்கள் விரும்புகிற தொழில்(entrepreneurs) என ஒன்று இருக்கும், ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு வரும்போது அந்த குறிப்பிட்ட தொழில், மக்களுக்கு எந்தளவுக்கு தேவையாய் இருக்கிறது மற்றும் பொருளாதார அடிப்படையில் அந்த தொழில் சிறந்து இருக்கிறதா என ஆய்வு செய்வது அவசியம். அதை ஆராயும் போதே, உங்களுக்கு மற்ற தொழில்கள் பற்றிய விளக்கங்களும் கிடைத்துவிடும்,கிடைக்கவில்லையென்றால் அவற்றையும் அலசி ஆராயுங்கள். அதனைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரியுங்கள்.


குறைந்த பட்சம், 3 ஆண்டுகளுக்காவது உங்களது தொலைநோக்குப் பார்வை இருப்பது நல்லது. இதுதான் நாம் துவங்கப் போகும் தொழில் என்பதில் உறுதி கொள்வதுதான் முதல் படி.


2. அனுபவத்தை விட சிறந்த ஆசிரியர் வேறேதும் இல்லை...ஆகவே, நீங்கள் வடிவமைத்துக் கொண்ட தொழில் பற்றிய விபரங்களுடன், உங்களது சொந்த ஐடியாக்களையும் கலந்து, நீங்கள் உலகில் இல்லாத ஒன்றை செய்ய போகிறீர்கள் என மற்றவர்கள் எண்ணும் அளவுக்கு ஒரு தோற்றத்தை கொண்டு வாருங்கள்.


ஏற்கனவே அதே தொழிலில் இருக்கும் அனுபவசாலிகளிடமும், துறை சார்ந்த வல்லுனர்களிடமும்- கௌரவம் பார்க்காமல், எவ்வித ஈகோவுமின்றி விளக்கம் கேளுங்கள். அவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள். தொழில்(entrepreneurs) கைக்கூடும் வரை நீங்கள் உங்களை அப்பாவியாக (சில சமயம் முட்டாளாக) காட்டிக் கொள்ள தயங்கவேண்டாம்.
நீங்கள் தெளிவு பெற்ற அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
இனி அந்த பாதையில் நடக்கவேண்டியதுதான்...


3. அடுத்து உங்களுக்குக்கான வாய்ப்புகள் எங்கேல்லாம் இருக்கிறதென தேடுங்கள்.அங்கெல்லாம் உங்களுக்கு உதவ மற்றும் தகவல் தருவதற்கு ஆட்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவுவதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதையும் சூசகமாகவோ நேரடியாகவோ தெரிவியுங்கள்.லாபம் இல்லாமல் யாரும் நூறு சதவீதம் உதவமாட்டார்கள்.


பெரும்பாலும், ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை தேடி கூட்டத்தோடு போட்டி போடாமல்- உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்.


முக்கியமாய்,அதில் பிற்காலத்தில் வரக்கூடிய அபாயங்களையும் யூகித்துக் கொள்ளுங்கள்.


4. திட்டங்கள் போட்டாயிற்று...அதை நிறைவேற்ற பணம்?
நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும், முழுக்க முழுக்க உங்களது பணத்தை மட்டுமே முதலீடாக கொள்வது அத்தனை உசிதமான செயல் அல்ல..உங்களை புரிந்துக் கொள்ளும் – உங்களுக்கு பிரச்சனைகள் தராதவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது நல்லது.
தனிப்பட்ட நபர்களின் முதலீடு / வங்கிக் கடன் / தனிநபர் கடன் / உங்கள் தரப்பு என - முதலீடுக்கான ஆதாரங்களை தீர்க்கமாய் தயார் செய்துக் கொள்ளுங்கள்.


முதல்ல ஆரம்பிக்கலாம், அப்பறம் பார்த்துக்கலாம் என அலட்சியமாக விட்டால், அதுவே முக்கியமான நேரத்தில் துயரமாகி விடும்.


5. தொழில்(entrepreneurs) என வந்துவிட்டால் போட்டி இல்லாமல் இருக்குமா?
உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுக் கொள்வது போல்,உங்களது போட்டியாளர்கள் யார் என்பதையும் அறிந்துக் கொள்வது அவசியம்.


நல்ல தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதை போல்,சலுகைகள்,விலைநிர்ணயம்,நேரடி தொடர்புகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அவசியம்.உங்கள் தொழில் எப்போதும் பேசப்பட என்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும். அதேசமயம் மற்றவர்களிடமிருந்து மாறுபாடாய் இருக்கவும் வேண்டும்.


பொதுவாக எல்லா நிறுவனங்களும் துவக்கப்படும் போது, பல குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை கொண்டிருக்கும். ஆனால் பல சமயங்களில் அவை கடைபிடிக்க முடியாதவைகளாய் மறக்கப்படும்.
காரணம், தங்கள் தகுதி- பலம்- ஸ்திரத்தன்மை பற்றி யோசிக்காமல்,ஆர்வக்கோளாறில் திட்டமிடுவதுதான்.


உங்களால் எதை பின்தொடரமுடியுமோ, அவைகளை மட்டும் உங்கள் நோக்கமாக,குறிக்கோளாக கொள்ளுங்கள்.அவை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாய், எல்லோரும் கடைபிடிக்க எளிமையானதாய் அமைதல் நல்லது.


உங்களால் உங்களுக்கான ஒரு தொழிற்கொள்கையை உருவாக்க முடியாவிட்டால் தயங்க வேண்டாம், யாரிடமிருந்தாவது அனுமதி பெற்று கடன் வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல விஷயத்தை பெற, யாரிடமும் பணிந்து போகலாம்.


உங்களுக்கு உங்கள் சுயமரியாதை முக்கியம், அதேசமயம் உங்கள் நிறுவனம்/ தொழிலின் முன்னேற்றமும் முக்கியம்.


6. தொழில்/ நிறுவனம் என ஒன்றை ஆரம்பித்து விட்டீர்கள், அதற்கு தலைமை?
உங்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனம் என்பதற்காக, நீங்களே தலைமை பதவியில் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை.
அதேசமயம் உங்களுக்கு பிடித்தவர்கள், உங்கள் கைக்கு அடக்கமானவர்கள் என்று,தகுதியில்லாதவர்களை அமர்த்தி விடாதீர்கள்-அது உங்கள் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும்.


நல்ல ஒரு தலைமைத்துவமே மற்றவர்களை உங்களை நோக்கி இழுக்கும் சக்தி...


கல்வி, அனுபவம், அணுகுமுறை, குறைந்தபட்ச நேர்மை மற்றும் விசுவாசம் கொண்டவர்களை அந்த பதவியில்- உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லா பொறுப்புகளையும் நீங்களே வைத்துக் கொள்ளும் பட்சத்தில், மற்றவர்கள் பொறுப்பற்றும், நம்பிக்கையற்றுமே இருப்பர்.


நல்ல தொழிலாளிகளை தக்கவைத்துக் கொள்ள எத்தனை பொருளாதார சலுகைகள் வேண்டுமானாலும் தரலாம். அதேபோல் போட்டியாளரிடமிருந்து நல்ல வேலையாளை கவரவும் தயங்கவேண்டியதில்லை.


7. அடுத்து, உங்கள் தொழிலை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு உங்களது நடவடிக்கைகள் மற்றும் பார்வைகளை சீர்திருத்துவது...
உங்களுக்காக வேலை செய்ய எத்தனை பேர் தயாராக இருந்தாலும்-முதன்முதலாக ஒரு வாடிக்கையாளரை கையாள்வது நீங்களாக இருப்பது நல்லது.


ஏனென்றால்,அவரை கவர்ந்திழுக்க எந்தளவுக்கு லாபத்தை விட்டுக்கொடுக்க முடியும் எனும் அளவுகோல் உங்களுக்கு மட்டுமே தெரியும்.


அதேபோல்,உங்கள் தொழில் சார்ந்த ரகசியம் என நீங்கள் எண்ணுவதை உங்களுடன் மட்டுமே வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு சிலரிடம் உண்மையை கூறி வையுங்கள்.


முக்கியமான ஒன்று- எல்லா லாபத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளவேண்டும் என துவக்கநிலையிலேயே ஆசைப்படாதீர்கள். கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்.


8. தொழிலில் மிகச் சிறிய வெற்றி கிடைத்தாலும் அதை மற்றவர்களும் உணரும் வகையில் கொண்டாடுங்கள். ஆனால் உங்கள் மனம் மட்டும் இது பத்தாது, இன்னும் வெற்றி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கட்டும். உடன் பணிபுரிபவர்களுக்கு அவ்வப்போது சிறு பரிசுகள் வழங்கி சந்தோஷப்படுத்துங்கள். அது அவரை உங்கள் போட்டியாளரிடம் போகவிடாமல் செய்யும்.


சோர்வாக இருக்கும் சமயத்தில் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் காட்டும் உங்களது உற்சாகம் மற்றவர்களை இன்னும் அதிகமாக வேலை செய்ய வைக்கும்.


9. முதல்நிலை வளர்ச்சியை நோக்கி செல்லும் வேளையிலேயே – உங்களது அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த திட்டமும் இருக்கட்டும்.இது முடியட்டும்,அதுக்கப்பறம் அதை பார்த்துக் கொள்ளலாம் எனும் நாகரீக கொள்கை இந்த காலகட்டத்திற்கு ஆகாது.


தற்போது உங்களுடன் இருப்பவர்களில் யாரெல்லாம் உங்களது அடுத்த கட்டத்திற்கு வருவார்கள் என்பதை நோட்டமிடுங்கள், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.


10. முதலீடுகளை இன்னும் பெருக்குவதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்துங்கள். முதலீடு அதிகம் இருந்தால் மட்டுமே ஒரு தொழில் எந்த சவாலையும் சந்திக்கமுடியும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo