'தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது'.. இதுபோல எப்போவாவது நீங்க 'பொங்கல் ' கொண்டாடி இருக்கீங்களா?

'தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது'.. இதுபோல எப்போவாவது நீங்க 'பொங்கல் ' கொண்டாடி இருக்கீங்களா?

பொங்கலோ பொங்கல்(Pongal)


தீபாவளி,ஆயுத பூஜை,விநாயகர் சதுர்த்தி என தமிழகத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் பெரும் சீரும்,சிறப்புமாக
கொண்டாடப்படுவது பொங்கல்(Pongal) பண்டிகை மட்டுமே. மற்ற பண்டிகைகள் எல்லாம் மதம் சார்ந்து கொண்டாடப்படுகையில் பொங்கல் பண்டிகை மட்டுமே எந்த மதத்தின் பின்னணியும் இல்லாமல் அறுவடைக்கு உதவி செய்த காளைகளுக்கு நன்றி சொல்லும் வகையிலும், அறுவடை செய்த தானியம் வீடு வந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.


  


விவசாயிகள்(Formers):


பெரும்பாலும் தீபாவளியை விவசாயிகள் அவ்வளவு விமரிசையாகக் கொண்டாட மாட்டார்கள். காரணம் அந்த நேரத்தில் அறுவடை எதுவும் இருக்காது. கையில் பெரிதாக காசும் புரளாது. ஆனால் இதற்கு நேர்மாறாக பொங்கலை விமரிசையாகக் கொண்டாடுவர். ஏனெனில் பொங்கலுக்கு முன் களத்து தானியம் வீடு வந்து சேர்ந்து விடும். நெற்பயிர்களை அறுவடை செய்து மகிழ்ச்சியாக இருப்பர். அந்த நேரத்தில் கையிலும் பணவரவுக்கு குறைவு இருக்காது. ஒருவேளை தானியம் வீடு வந்து சேர்வது முன்பின்னாக இருந்தாலும் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லைக் காட்டி யாரிடம்
வேண்டுமானாலும் பணம் கடனாக வாங்கிக் கொள்ளலாம்.


 


இதுதவிர வருடம் முழுவதும் தமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பது,  பயிர்களுக்கு ஒளி கொடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவிய
சூரியனுக்கு நன்றி செலுத்துவது ஆகியவை விவசாயிகளுக்கு புத்துணர்வை ஊட்டுவதாகும். இதனாலேயே கடன், கிடன் வாங்கியாவது பொங்கலைக்
கொண்டாடக் கிளம்பிடுவர்.


பொங்கல் வகைகள்(Types Of Pongal)


 
பொதுவாக பொங்கல் பண்டிகையை போகி, சூரியப்பொங்கல் (வீட்டுப்பொங்கல்), மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடி மகிழ்கிறோம்.


போகி(Bohi)


அந்தவகையில் இன்றைய தினம் போகி ஆகும். இதில் வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை போட்டுக் கொளுத்துவர். துணிமணிகள்,
போர்வைகளை துவைப்பது மற்றும் வீட்டில் உள்ள ஒட்டடைகளை அடித்து வீட்டினை தூய்மைப்படுத்துவர். ஒருசிலர் வீட்டிற்கு வண்ணம் பூசியும்
மகிழ்வர்.


சூரியப்பொங்கல்(வீட்டு பொங்கல்):


 காலையில் சூரிய உதயத்தின்போதே பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிப்பர். பெரும்பாலான இடங்களில் மாலையில் பொங்கல் வைத்து,
பரங்கிக்காய் பொரியல் செய்து சாமிக்கு படையல் இடுவர். அன்றைய நாளில் வீட்டின் முன்னர் வண்ணக்கோலம் இட்டு கரும்பு வைத்து பொங்கல்
பானைகளின் கழுத்தில் மஞ்சள் கொத்துகளை கட்டி பொங்கல் வைப்பர்.இதுபோக வெண்பொங்கல்+சாம்பார் வைத்து வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவர்.


 மாட்டுப் பொங்கல்:


இன்றைய நாளில் விவசாயத்திற்கு வருடம் முழுவதும் உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளைக் குளிப்பாட்டி
கொம்புகளுக்கு வர்ணம் பூசி,நெற்றியில் திலகமிடுவர்.தொடர்ந்து தங்கள் கைகளாலேயே (அந்தந்த பகுதிகளில் கிடைக்கும்) பூக்கள் மற்றும் செடிகளை
வைத்து மாலைகள் கட்டி தங்கள் கால்நடை செல்வங்களுக்கு அழகு சேர்ப்பர். இந்த நாளில் கிராமத்து மக்கள் அனைவரும் சேர்ந்து பொதுவான
இடமொன்றில் பொங்கல் வைத்து அதனை சாமிக்கு படைப்பர். தொடர்ந்து அனைவரது வீட்டு பொங்கலிலும் இருந்து ஒரு கைபிடி அளவு பொங்கல்
எடுத்து அதனுடன் வாழைப்பழம், பால் போன்றவற்றை சேர்த்து ஒன்றாகப் பிசைவர். சாமிக்கு படையலிட்ட பின் பிசைந்த சோற்றை உருண்டையாக
உருட்டி கால்நடைகள் வைத்திருப்போருக்கு அளிப்பர்.அந்த உருண்டைகளை வாங்கி தங்கள் கால்நடை செல்வங்களுக்கு மக்கள் ஊட்டி மகிழ்வர்.


 தீயைத் தாண்டும் கால்நடைகள்:


இதற்குப்பின் பொங்கல் வைத்ததில் எஞ்சிய விறகுகளை ஓரிடத்தில் வரிசையாகப் போட்டு அதற்கு தீவைப்பர். இதில் மாடுகள் தங்கள் எஜமானர்களுடன் தாண்டிக் குதிக்கும். பின்னர் ஊர்மக்கள் அனைவரும் தங்களது பொங்கல் வைத்த பானைகளை எடுத்துக்கொண்டு தத்தமது வீடுகளுக்கு வரிசையாகத் திரும்புவர்.உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி மகிழும் பொருட்டு இந்த விழா இன்றும் பல்வேறு கிராமங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


காணும் பொங்கல்


காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார்,உறவினர்,
நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.அன்றைய தினம் இளம்பெண்கள் வீடுகளின் முன்னால் கோலங்கள்  போட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அவற்றின் நடுவில் பரங்கிப்பூ வைத்து சாமி கும்பிடுவர்.அன்றைய நாளில் ஊர் இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஊர்மக்களை மகிழ்விப்பர். பெரும்பாலான இடங்களில் வீரத்தினைப்
பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இதேபோல வருடம்தோறும் பொங்கல் பண்டிகைகள் நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடுத்த வருட பொங்கல் எப்போது வரும்?
என்ற எண்ணம் தோன்றாமல் இராது. நீங்களும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலோ அல்லது கிராமத்தில் உங்களுக்கு உறவினர்கள் இருந்தாலோ
பொங்கலை உற்றார்-உறவினருடன் சேர்ந்து அங்கே கொண்டாடி பாருங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மறக்கவியலாத நிறைவையும், தனி
சுகத்தினையும் அளிக்கும்...அனைவருக்கும் Popxo-வின் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்....