logo
ADVERTISEMENT
home / #MeToo
“மி டூ இயக்கம்” அறிந்ததும் அறியாததும்!

“மி டூ இயக்கம்” அறிந்ததும் அறியாததும்!

இந்தியாவில் “மி டூ ” பற்றி  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

#இந்தியாவில் மி டூ இயக்கம்

என்ன இது மி டூ இயக்கம் ? ஏன் எல்லோரும் இப்போது இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

சாதமும் பருப்பும்  பாதி சாப்பிட்டபடி இருக்கையில் என் எதிரே அமர்ந்திருந்த என் பாட்டி  என்னிடம் இதைப் பற்றி கேட்டார். கேட்கும் போது அவர் சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவிக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

நான் மீண்டும் பாட்டியிடம் எதைப் பற்றி கேட்கிறார் என்பதை தெளிவாகக் கூறும்படி கேட்டுக்கொண்டேன். அதற்கு பாட்டி ” ஓ அதுவா …  நான் நேற்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது அதில் பொழுதுபோக்கு பகுதியில் இது பற்றி போட்டிருந்தார்கள்.உனக்கு நிச்சயம் இது பற்றி தெரிந்திருக்கும். அதனால் உன்னிடம் கேட்கிறேன் என்றார்.

எனக்கு என் பாட்டி #metoo  பற்றி கேட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதற்கான பதிலை நான் தர வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே நான் சாப்பிடும் தட்டை அகற்றி வைத்து விட்டு பாட்டிக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

தனுஸ்ரீ தத்தா நானா படேகரில் இருந்து பதிலை ஆரம்பித்தேன். பின் விகாஸ் பால் என மி டூ இயக்கம் பற்றியும் அதன் விளக்கம் பற்றியும் உதாரணத்தோடு கூற ஆரம்பித்தேன். உடனே பாட்டி என்னை இடைமறித்தார் நான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இது சினிமா இண்டஸ்ட்ரியில் மட்டும்தான் நடக்கிறதா என்று கேட்டார்.

நானும் இல்லை பாட்டி இந்த இயக்கம் அமெரிக்காவின் ஹாலிவுட் இண்டஸ்ட்ரியில் இருந்து நடக்கிறது என்று கூறினேன். அங்கிருந்து எப்படி உலகம் முழுவதும் இது பரவியது என்பதை பற்றியும் ஒவ்வொரு தொழிலும் இந்த சிக்கல் இருப்பதையும் அதுபற்றி பதிவிடப்பட்ட சில புகார்களைப் பற்றியும் கூறினேன்.

ADVERTISEMENT

மேலும் ஹாலிவுட்டில் நடந்த சில நிகழ்வுகளை நான் கூற ஆரம்பித்தேன்.இந்த இடத்தில் என் பாட்டி தனது மி டூ இயக்கம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை குறைத்துக் கொண்டார்.

அப்போதுதான் நான் இதன் விளக்கத்தை சரியாக சொல்லவில்லை என்பது பற்றி புரிந்து கொண்டேன்.

எத்தனை முறை மி டூ இயக்கத்தைப் பற்றி படித்திருந்தாலும் , பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து விவாதித்திருந்தாலும் இன்னும் நான் இந்தப் புதிரான மி டூ  இயக்கம் பற்றிச் சரியாக என் சொந்த பாட்டிக்குப் புரியும் வகையில் விளக்க முடியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

ஆகவேதான் இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதில் மி டூ இயக்கம் பற்றியும் இந்த தலைமுறைகள் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு முக்கிய இயக்கமாக ஏன் இந்த மி டூ இயக்கம் பார்க்கப்படுகிறது என்பது பற்றியும் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் முழுமையாகப்  புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறேன்.

ADVERTISEMENT

மி டூ இயக்கம் என்றால் என்ன?

மி டூ இயக்கம் என்பது பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய ஒரு இயக்கம் ஆகும். ஆரம்ப காலத்தில் இது அமெரிக்காவில் 2006 ஆம் வருடம் இது போன்ற துன்பத்திற்கு ஆளானவர்களுக்காக பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிகழ்வில் இருந்து மீள்வதற்காக ஆரம்பிக்கப் பட்டது.

2007 இலையுதிர்காலத்தின் போது  இணையத்தின் வழியாக இந்த இயக்கம் வேகமாக பரவ ஆரம்பித்தது.  பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டின் பற்றிய பாலியல் புகார்கள் அவரையும் இந்த இயக்கம் பற்றியும் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

10க்கும் மேற்பட்ட பெண்கள் அவரால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக ட்விட்டரில் #metoo  மூலம் குரல் கொடுத்தனர். ஹாலிவுட் பிரபலாமான அலிஸா மிலானா மற்றும் ஆஷ்லி ஜூட் மேலும் ஆஸ்கர் விருது வென்ற க்வினத் பாட்ரோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ்சும் ஹார்விக்கு எதிராக புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

இந்த மிடூ இயக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?

நியூ யார்க்கை  சேர்ந்த சமூக ஆர்வலர் தரானா பார்க்கே என்பவர் 10 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்தார். நிற வேறுபாடுகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள பெண்கள் இத்தகைய பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது பற்றி அவர் ஆரம்பத்தில் பேச ஆரம்பித்தார்.

இந்த மிடூ இயக்கத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் தனியாக இல்லை என்று உணர்வதற்காக இவர் ஆரம்பித்தார்.

ADVERTISEMENT

கடந்த வருடம் நடிகைக்கு ஆலியா மிலானோ இந்த இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ட்விட்டர் மூலம் ஏற்படுத்தினார். யாரெல்லாம் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் இந்த ஹாஷ்டாக் பயன்படுத்தி தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றார்.

ஆலியாவின் இந்த ட்வீட்டைத் தொடர்ந்து டைம்ஸ் நியூ யார்க்  பத்திரிகை ஹார்வியின் கடந்த கால குற்றங்களைத் துப்பறிந்து வெளியிட்டது. இதனால் சில நாட்களில் இந்த மிடூ இயக்கம் உலகெங்கும் வைரல் ஆனது.

இதுவே “டைம்ஸ் அப் ” எனும் துணை இயக்கத்தையும் ஆரம்பிக்க உதவியது.

ADVERTISEMENT

 

இந்தியாவில் மிடூ இயக்கம்

அமெரிக்காவில் ஆரம்பித்த மிடூ அலை வேகமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இத்தாலியைத் தொடர்ந்து இந்தியாவிற்குள் மிடூ இயக்கம் வந்தது.

ADVERTISEMENT

பிரபல நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் கல்கி கோச்சலின் மிக தைரியமாக இந்த இயக்கத்தை வரவேற்றனர். புகார்களை முன்வைத்தனர். இந்த இயக்கம் வெகு வேகமாக பரவியது சக பாலிவுட் நடிகைகளும் பாதிக்கப்பட்ட மற்ற நடிகைகளுக்குத் துணையாக நின்றனர். மற்ற தொழில்களுக்கும் இந்த இயக்கம் பரவியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் அனுபவங்களை இணையதளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

அதன்பின் நடிகை ரிச்சா சவுதா இதற்கென ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து இந்தியாவில் இது போன்ற பாலியல் சீண்டல்கள் பாலியல் அத்துமீறல்கள் அதிக அளவில் இருப்பது பற்றி எழுதினார்.

இருப்பினும் கடந்த செப்டம்பர் வரை அதிகம் பேசப்படாத மிடூ நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மூலம் தான் பாலியல் அத்துமீறல்களை அனுபவித்தது பற்றிக் கூறியதும் இந்த இயக்கம் மீண்டும் சூடு பிடித்தது.

2008ல் நடந்த ஹார்ன் ஓகே ப்ளீஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் அத்து மீறியதாக தனுஸ்ரீ கூறியிருந்தார். அந்த சமயத்தில் அந்த படக்குழுவினர் தனக்கு உதவி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். யாரும் தனக்கு உதவி செய்ய முன் வராததால் படப்பிடிப்புத் தளத்தை விட்டுத் தான் வெளியேறி விட்டதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இவரது இந்த நிகழ்விற்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை மாறாக தனுஸ்ரீயின் கார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் அவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிரட்டப்பட்டார்.

இன்னொரு பெண் இந்த மிடூ இயக்கத்தின் மூலம் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றிப் பகிர்ந்த போது தனக்கு நடந்த கொடுமையை மீண்டும் பகிரங்கப்படுத்தினார் தனுஸ்ரீ. இம்முறை மிடூ ஹாஷ்டாக் மூலம் தனக்கு நடந்ததைக் கூறினார்.

இவரது இந்த முடிவு பாலிவுட்டில் இது போல பாலியல் கொடுமைகளை அனுபவித்த பல்வேறு பெண்களுக்கு ஆரம்ப வாசலாக அமைந்தது. அவர்களும் பேச தொடங்கினார்கள்.

ADVERTISEMENT

அதன் பின் காமெடி நடிகரும் எழுத்தாளருமான உத்சவ் சக்ரபர்தி மீது அவர் உடன் பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த வரிசையில் குயின் பட இயக்குனர் விகாஸ் பால் மீது பாண்டம் பிலிம்ஸ் சின் சக பணியாளர் ஒருவர் புகார் அளித்தார். இதன் பின் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரணாவத்தும் இயக்குனரின் நடவடிக்கைகள் தவறாக இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக பாலிவுட் அல்லாமல் வெளி இடங்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்தன. முன்னாள் யூனியன் மந்திரி MJ அக்பர் பத்திரிகையில் எடிட்டர் ஆக இருந்த போது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக  6 பெண்கள் அடுத்தடுத்து புகார் கொடுத்தனர்.

சமீபத்தில் பிளிப் கார்ட் நிறுவன CEO பின்னி பன்சால் இதே போன்ற புகாரால்  தனது வேலையை ராஜினாமா செய்த போது இந்தத் துறையை சேர்ந்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் சீண்டல் துன்பங்களை பற்றி 12 இந்தியப்  பெண்கள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட விவரங்கள்.

ADVERTISEMENT

மீ டூ ஹாஷ்டாக் மூலமாக பல்வேறு பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் மற்றும் வன்கொடுமைகளை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர், தாங்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் சம்பவம் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட மனதளவில் அந்த சம்பவத்தில் இருந்து வெளிவராதது பற்றியும் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இருந்தாலும் இன்னமும் இந்த மிடூ இயக்கம் ஒரு சில ஆதிக்கவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய நமது ஆதரவைத் தெரிவிக்க பாப்எக்ஸ்சோ தனது பணியாளர்களிடம் இது குறித்த பல கேள்விகளை முன்வைத்தது. தங்களுக்கு ஏற்பட்ட அந்தரங்க சிக்கல்கள் பற்றி வெளியிட சொல்லி வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

1. “அவன் தனது பாண்ட்டை  கழற்றி ஆணுறுப்பை கைகளில் பிடித்தபடி ஒரு மேம்பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தான் அப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கலாம்.”

ADVERTISEMENT

அப்போது மதியம் மூன்று மணி இருக்கும். நான் கல்லூரியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து இறங்கி வீடு வரை நடக்கலாம் என்று முடிவு செய்தேன். எப்போதும் காதுகளில் இசை கேட்டபடி நடப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது என் நாளை சிறப்பானதாக மாற்றும். ஆகவே நான் நடக்க ஆரம்பித்தேன். அந்தப் பாலத்தில் ஒரு இடத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கவனிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லாததால் அவனைத் தாண்டி நான் நடக்க ஆரம்பித்தேன். திடீரென அந்த இளைஞன் என் எதிரே வந்து என்னை மறித்தபடி நின்றான். நான் பயந்து கிட்டத்தட்ட பாலத்தின் சுவரில் ஒண்டிக் கொண்ட படி கொஞ்சம் வெறுப்போடு அவனைப் பார்த்தேன். அவன் முகத்தைப் பார்க்கையில் எனக்கு எதுவும் புரியவில்லை. பின் அவன் கண்களை கீழிறக்கிய போதுதான் அந்த பயங்கரம் புரிந்தது. அவன் அவனையுடைய ஆணுறுப்பை வெளியே எடுத்து எனக்கு காட்டிக் கொண்டிருந்தான்.  அவன் அதைக் காட்டியபின் அங்கிருந்து ஓடி விட்டான். இது நடக்கும்போது அருகே ஒருவரும் இல்லை. அதன்பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டேன். நான் இதனைப் பற்றி பலரிடம் பேசினேன். அவர்கள் யாருக்கும் அது பற்றிய புரிதல் இல்லை. இந்த இளைஞன் என் அருகில் வந்து அவனது ஆணுறுப்பைத் திறந்து காட்டிவிட்டு ஓடிவிட்டான். அது என்னை அருவெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஆனால் அந்த சமயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பின்பு நான் வீட்டிற்கு நடந்து வருவதையே நிறுத்தி விட்டேன். பட்ட பகலில் இவ்வாறு ஒரு இளைஞன் நடந்து கொண்டான் என்றால் அதுவே இரவாக இருந்து இரண்டு இளைஞர்களிடம் நான் சிக்கி இருந்தால் என்னாவது என்கிற கேள்வி என்னை ரொம்ப நாளாக வதைத்துக் கொண்டே இருக்கிறது. ஆமாம், #Metoo.

இஷ்டிதா ஷர்மா துணை எடிட்டர் லைஃப் ஸ்டைல்

 

ADVERTISEMENT

2. நான் பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது ஒரு வயதானவன் என்னை அப்படியே உள்ளே தள்ளினான்

அப்போது நான் 16 வயது பெண். டீனேஜ் மக்கள் டீனேஜ் மக்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பார்ட்டியில் நான் கலந்து கொண்டிருந்தேன். இன்றைக்கு யோசித்துப் பார்க்கும்போது அந்தப்  பண்ணை வீட்டில் எனக்கு வேறெந்த வேலையும் இல்லை. பாதுகாப்பில்லாத அந்தப் பண்ணை வீட்டில் நான் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தேன்.

அப்போது அங்கிருந்த பாத்ரூமைப் பயன்படுத்திவிட்டு வெளியே வரும்போது ஒரு வயதான ஆள் என்னை அப்படியே உள்ளே தள்ளினான். எனக்கு அதிகமாக நினைவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்களில் நான் அவனை சமாளித்து அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அதன் பின் அந்த மாலை முழுவதையும் நான் கண்ணீரோடு கழித்தேன். என் நண்பர்கள் என்னை சமாதானப்படுத்தினர். அந்த ஆள் யாரென உடனே கண்டுபிடித்து வெளியேற்றி விட்டார்கள். அனால் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.பெரிதாக என்னை அவன் சிதைக்கா விட்டாலும் கூட அந்த சின்ன பாதிப்பு என்னை பல வாரங்கள் மனஉளைச்சலில் தள்ளியது. அந்த வாரம் முழுக்க நான் அழுது கொண்டே இருந்தேன்.

ADVERTISEMENT

துணை எடிட்டர் நித்யா உப்பல்.

3. நான் என் அறிவை பயன்படுத்தி அவனை அங்கிருந்து அகன்று விட சொன்னேன்.

நான் அப்போது கார்க்கி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பாண்ட் பயிற்சியை முடித்தபடி நான் வீட்டுக்கு செல்வதற்காக நான் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது மணி மாலை நான்கில் இருந்து ஐந்து மணி இருக்கும். சிறி போர்ட் சாலை அப்போதெல்லாம் பாலைவனம் போல் ஆளரவம் அற்று இருக்கும் நேரம்.

அப்போது என் அருகே ஒரு கார் வந்தது. எனக்கு முன்பாக நின்றது. உள்ளே இருந்த ஒரு ஆள் என்னை காருக்குள் வர சொல்லும்படி தலையாட்டினான். எனக்கு எதுவும் புரியவில்லை. எனக்கு பொதுவாக முகங்களை நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் உண்டு. நான் இதை ஆளை எங்கேனும் பார்த்திருக்கேனா என்றபடி எவ்வளவு யோசித்தும் அந்த ஆள் முகம் நினைவில் வரவில்லை. ஆகவே அவன் புதிய நபர் என்று உணர்ந்து கொண்டேன்.

ADVERTISEMENT

அவனிடம் வழி ஏதும் தெரியவில்லையா எங்கு போக வழி கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவன் சிரித்தான். எனக்கு புரியவில்லை. அப்போது நீ கல்லூரியில் படிக்கும் பெண் தானே என்று கேட்டான். நான் தலையசைத்தேன். காமன் வெல்த் விளையாட்டுகளில் நீ வாலன்டியர் செய்ய விரும்புகிறாயா என்று கேட்டான். ஆம் அப்போதுதான் இந்திய தலைநகரம் காமன் வெல்த் விளையாட்டை நடத்திக் கொண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரும் விரும்பிக்  கொண்டிருந்தனர்.

இதைப் பற்றி நீ ஏன் கேட்கிறாய் என்று அவனிடம் தைரியமாக கேள்வி கேட்க என்னால் முடிந்திருந்தது. அதற்கு அவன் ஏனெனில் என்னால் உனக்கு வேலை கொடுக்க முடியும் என்று பதில் சொன்னான். அவனது சிரிப்பு விகாரமாக இருந்தது. அதற்கான அர்த்தம் அவனுக்கு மட்டுமே புரிந்தது எனக்கு புரியவில்லை. என்னோடு ஹோட்டல் அறைக்கு வா அங்கு உனக்கு வேலை பற்றி சொல்கிறேன் என்றான்.

எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் இதற்கு முன் நடந்திராததால் நான் பதில் அளிக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. அதற்குள் அவன் இந்தியில் ஏன் பயமா இருக்கா என்று கேட்டான். மேலும் மிக லேசான ப்ரா அணிந்திருக்கும் உனக்கு என்னைப் பார்த்து பயமா என்று இந்தியில் கேட்டான்.

நான் ஒரு ஹால்டர் வகை ப்ரா அணிந்திருந்தேன். அதற்கு மேல் முழுமையாக என் உடலை மறைக்கும் வகையில் ஒரு டி ஷர்ட் மற்றும் ஜீன் அணிந்திருந்தேன். ஆனாலும் அவன் கண்கள் என் உடலில் சிறு பகுதியை மறைத்த அந்த உடையைத்தான் பார்த்தபடி இருந்தது.

ADVERTISEMENT

ஆனாலும் நான் அவனை என் உறுதியான பதிலால் அங்கிருந்து அகற்றினேன். நோ தேங்க் யு என்னும் பதில்தான் அது. அதன்பின் அங்கிருந்து சென்று விட்டான்.

அதற்கு பின் வந்த ஆட்டோக்காரன் வழக்கத்திற்கும் அதிகமான பணம் கேட்டான். எப்படியாவது அங்கிருந்து கிளம்ப விருப்பிய நான் அதற்கு சம்மதித்துக் கிளம்பிவிட்டேன். மின்னல் வேகத்தில் போ என்றும் அவனிடம் கூறினேன்.

டெசிட்ரே பிளெமிங் லைப் ஸ்டைல் எடிட்டர்

ADVERTISEMENT

4. என்ன நடக்கிறது என்று நான் அறிந்து கொள்ளும் முன்  ஒரு இயல்பான பேச்சு என் பின்பக்கங்களைத் தட்ட அவனுக்கு போதுமானதாக இருந்தது.

கார்ப்பரேட் உயர் அதிகாரத்தில் ஒரு ஆண் இருந்தால் அங்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்பது பற்றிய என் மோசமான அனுபவத்தை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அலுவலகத்தின் வராண்டாக்களில் அடிக்கடி நடப்பதும், பெண்களோடு உரசி உரசி பேசுவதும், அவர்களை பாராட்டுவதும் அவனது இன்னொரு முக்கிய வேலையாக இருந்தது. அவனை யாரும் அங்கு தவறாகவே பார்க்கவில்லை . காரணம் ஒரு சில பெண்கள் அவனைத் தடுக்கவில்லை. வேறு சிலர் இதனை அவன் சுபாவம் என்று நினைத்துக் கொண்டனர்.

ஏனெனில் அவன் அந்த நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தான். அவனை யாரும் தொடக்கூட முடியாது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அனைவருக்கும் அவனிடம் ஒரு பயம் இருந்தது.

ADVERTISEMENT

நாங்கள் ஒரு முறை வெளிநாட்டிற்கு அலுவலக வேலையாக சென்றிருந்தோம். அங்கு நான் தனியாக எனக்கான ட்ரின்க் வாங்கியபடி நின்று கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னை அவனோடு பேச அழைத்தான். அது ஒரு சாதாரணம் என்று கருதிய நான் அவன் நின்றிருந்த இடத்திற்கு சென்றேன். என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன் ஒரு இயல்பான பேச்சு என் பின்பக்கங்களை தடவ அவனுக்குப் போதுமானதாக இருந்தது,

அங்கிருந்து நான் அழுதபடி வெளியேறினேன். நான் பாத்ரூமில் அழுது கொண்டிருப்பதை என் நண்பர்கள் உணர்ந்து கொண்டனர். சிறிது நேரத்தில் அலுவலக நண்பர்கள் முழுவதும் இந்த விஷயம் தெரிந்தது.

அடுத்த நாள் நான் “அந்த மாதிரி ” பெண் இல்லை என்பதை அவன் உணர்ந்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பும் கோரினான். அவன் மன்னிப்பு கேட்ட மாதிரியே தெரியவில்லை. நான் எப்போதும் இப்படித்தான் என்றும் என்னோடு இன்னும் கொஞ்ச நாள் அலுவலகத்தில் பழகினால் நீயும் இதனை ஏற்றுக் கொள்வாய் என்றும் கூறினான்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் யாருமே அவனிடம் போய் இப்படி நடந்தது தவறு என்று கூறவில்லை. அவனது அதிகாரம் அவர்களை பயமுறுத்தியது. பெண்கள் அனைவரும் அவன் குணம் அப்படிதான் என்றனர். இளைய வயதுடைய பெண்கள் மட்டுமே எனக்காக ஆதரவு செய்தனர். நிர்வாகத்தில் முறையிட்டனர்.

ADVERTISEMENT

அது ஒரு வெளிநாடு சார்ந்த அலுவலகப் பயணம் என்பதால் என்னால் அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு வரமுடியவில்லை. மீதி நாட்கள் எல்லாம் நான் மனதளவில் தனித்து இருந்தேன். அதன்பின் சில நாட்களில் அந்த வேலையை நான் விட்டு விட்டேன். இருந்தாலும் நான் இன்னமும் வருத்தப்படுவது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும்தான். அந்தப் பொறுக்கிக்கு எதிராக நான் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் அது.

நிதி காவ்லே. சீனியர் பியூட்டி ரைட்டர்.

5. லிப்ட்டின் கதவுகள் மூடிய உடன் அந்த ஆண் அவனது உறுப்பை எனக்கு காட்டிக் கொண்டு நின்றான்.

அப்போது மாலை மணி 7 இருக்கும். நான் எனது காதுகளில் ஹெட்செட் போட்டபடி அஹமதாபாத்தின் மிகப்பெரிய மால்களில் ஒரு மாலிற்கு சினிமா பார்ப்பதற்காக சென்றிருந்தேன். ஒரு காலியான லிப்ட்டில் நான் 7வைத்து மாடிக்கு செல்ல முயல்கையில் ஒரு ஆண் அந்த லிப்ட்டிற்குள் நுழைந்தான். அவன் கைகள் அவனது ஜீன்ஸ்சின் ஒரு புறத்தை பிடித்திருந்தது. எதற்காக இவன் இப்படி நுழைகிறான் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது லிப்ட்டின் கதவுகள் மூடின. அவை மூடின அடுத்த நொடியே அவனது பேண்டுக்குளிருந்து அவனது உறுப்பை வெளியே எடுத்து எனக்கு காட்டினான். நான் அதிர்ந்து போனேன். அது ஒரு ஏழு மாடி பயணிக்க வேண்டிய லிப்ட்.. அவ்வளவு நேரம் அவனோடு நான் இருந்தால் அவன் என்னை என்னவெல்லாம் செய்ய நேரிடும் என்பதை உணர்ந்தேன்… அடுத்த பிளோரில் லிஃப்டை நிறுத்தியபடி நான் கத்திக் கொண்டே ஓடினேன். என் பயத்தை கவனித்த ஒருசிலர் என்ன என்ன என்று கேட்டனர். நான் விஷயத்தை சொன்னேன்.. அதற்குள் என்னைப் பார்த்து இளித்தபடியே அவன் ஓடினான். நான் கத்தியும் அவன் பிடிபடவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் உடனடியாக மீண்டு விட்டேன். ஏனெனில் பெண்கள் எல்லாவற்றில் இருந்தும் எளிதில் மீண்டு விடுவார்கள். என்றாலும் நான் விடவில்லை. அங்கிருந்த செக்யூரிட்டிகளிடம் CCTV யில் பார்க்க சொன்னேன். அவனைக் கண்டுபிடித்து விடலாம் எனறு நினைத்தேன். ஆனால் பாருங்கள் அத்தனை முக்கியமான அவ்வளவு மக்கள் வந்து போகிற ஒரு மாலில் லிப்ட்டில் CCTV வைக்காமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அவன் தப்பித்து விட்டான். இது போன்ற மோசமான உள்கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டில்தான் பெண்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

இப்படி இருந்தால் ஒரு பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கிறது என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?

சுமோனா போஸ் – பாஷன் ரைட்டர்.

 6. அவன் என் அக்குளிற்குள் கை வைத்து அழுத்திக் கொண்டிருந்தான். அவன் குடித்திருந்தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

ADVERTISEMENT

அப்போது எனக்கு 18 வயது.மதியம்  நான் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு பேருந்தில் ஏறி அங்கிருந்த ஜன்னல் பக்க சீட்டில் அமர்ந்தேன். அப்போது என் அருகே ஒரு ஆண் வந்து அமர்ந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவன் என் அக்குளிற்குள் அழுத்திக் கொண்டிருந்தது உணர்ந்து கொள்ள முடிந்தது. உடனே எழுந்தேன். அங்கிருந்து நகர்ந்து பேருந்தின் முன்பகுதிக்கு சென்றேன். அதோடு இது முடியவில்லை. அவனும் எழுந்து என் அருகே வந்தான். நான் பயந்து போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட்டேன். என்னோடு சேர்ந்து அவனும் இறங்கினான். பயத்தில் இதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. நான் மீண்டும் அடுத்த பேருந்தில் ஏறி என் வீட்டு நிறுத்தத்தில் இறங்கினேன். அப்போது அவன் என் அருகே வரப் பார்த்தான். நான் அப்போது மேலும் பயந்து போய் வீடு நோக்கி ஓட ஆரம்பித்தேன். அவன் பின்தொடர்கிறானா என்பதை கவனித்தபடி ஓடி வீட்டை அடைந்தேன். நல்லவேளையாக அவன் பின்தொடரவில்லை. ஒரு 18 வயதுப் பெண்ணான எனக்கு இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒரு சில வாரங்கள் நான் பேருந்தில் செல்வதையே தவிர்த்தேன்.

சோனாலி பவார் – பியூட்டி ரைட்டர் மற்றும் துணை எடிட்டர்

7. அவன் கைகள் உடலின் எல்லா பாகங்களையும் தடவின. ஒரு நிமிடத்திற்கு நாங்கள் மூவரும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.

ஒரு 18 வயது பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா. அவளைப் பொறுத்தவரை அது தேவையற்ற ஒன்று என்று நினைப்பாள். அதைப் போலவே தான் நானும் இருந்தேன்.அப்போது நான் என் வீட்டில் இருந்து ஒரு வீடு தள்ளியிருக்கும் என் அத்தையைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த மார்கெட்டிற்கு செல்வதற்காக என் சகோதரிகளுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் மூவருக்கும் விவாதம் ஏற்பட்டது. எந்த வழியாக மார்க்கெட் செல்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தோம் ஏனெனில் இரண்டு வழிகள் இருந்தன அதில் எது சீக்கிரம் செல்லும் வழி என்பது பற்றி பேசியபடி வந்து கொண்டிருந்தோம்.

ADVERTISEMENT

அப்போது ஒருவன் எங்கள் பேச்சை கேட்டபடி பின்தொடர்ந்து கொண்டிருந்தான். எங்களுக்கு வழி தெரியவில்லை என்று நினைத்து அவன் ஏதோ சொல்ல வருகையில் நாங்கள் அவனைத் தவிர்த்துவிட்டு நடந்து கொண்டிருந்தோம். ஒரு இருளான சந்தில் அவன் எங்களைத் தட்டு தடுமாறும்படி முன்னே வந்தான். இத்தனைக்கும் அது எங்கள் வீட்டின் பின்புறம் இருந்தது. ஒரு நிமிட நேரத்தில் அவன் கைகள் எங்கள் அத்தனை பேரின் உடலையும் தடவியது. சுதாரித்துக் கொண்ட நாங்கள் வீட்டில் எங்கள் அப்பா இருப்பதால் கத்த ஆரம்பித்தோம். அக்காவை அவன் அதிகமாக வருத்தியிருப்பான் போல அதனால் அவள் அழ ஆரம்பித்தாள். நாங்கள் அவனை துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்தோம். அவனைத் தண்டிக்க வேண்டிய அவர்கள் லேசாக மிரட்டிவிட்டு அவனை வெளியே போக சொல்லி விட்டார்கள். எங்களிடமும் உங்க எதிர்காலமே பாழாயிடும் கிளம்புங்க என்று கூறினார்கள்.  நடந்ததை விடவும் எங்களை ஆத்திரமூட்டியது இந்த பதில்தான். எங்கள் வீட்டின் அருகிலேயே எங்களிடம் இத்தனை ஆணித்தரமாக தவறாக நடக்க ஒரு ஆணுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்கிற கேள்வி என்னை இப்போது வரை அந்த சம்பவத்தை மறக்க விடவில்லை.

-ஷிரிஷ்ட்டி குப்தா – ஜூனியர் எடிட்டர்

8. அது தெரியும் முன் நான் ஒரு ஓரத்திற்கு தள்ளப்பட்டிருந்தேன். என் இடுப்பைப் பற்றி அவன் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

ADVERTISEMENT

இது நடக்கும்போது எனக்கு பள்ளியில் கோடை விடுமுறை விட்டிருந்தனர். அப்போது எனக்குப் பதினோரு வயதிருக்கும். நான் மற்றும் என் அக்கா இருவரும் விடுமுறைக்கு மும்பை செல்லப் போவதாக அப்பா அறிவித்தார். அங்கு நாங்கள் ஒரு திருமணத்திலும் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதன்பின் அங்கிருந்து கோவா செல்லலாம் என்று அப்பா திட்டமிட்டார். எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அப்பாவின் புதிய நண்பர் ஒருவர் அவருக்கு 45 வயதிருக்கலாம். என்னோடு வந்து பேசிக் கொண்டிருந்தார், அவரை நான் அங்கிள் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன். அவரிடம் நிறைய மிட்டாய்கள் இருக்கும். ஆகவே என் வயதிற்கு அவர் நல்ல அங்கிள் போலத்தான் தெரிந்தார். இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். அது மிகப் பெரிய மனிதர்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு இடம். தெருவில் பார்க்கும் ஒரு சாதாரண நிழல் மனிதனும் அல்ல. அதன்பின் என் கம்ப்யூட்டர் அறிவை சோதித்துக் கொண்டிருந்தார். நாம் நடக்கலாமா என்று கேட்டார். பேச்சின் சுவாரஸ்யத்தில் நான் நடந்தபடியே பதில் அளிக்க ஆரம்பித்தேன்.

அதற்குள் நான் நடந்து வந்த பாதையின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். அங்கு என் இடுப்பை பிடித்தபடி என் உதடுகளில் அவன் முத்தமிட்டான். 11 வயது பெண்ணிற்கு அது சரியா தவறா என்கிற எதுவும் புரியவில்லை. எனக்கு அது பிடிக்கவில்லை. அதற்குள் அவன் என் சிறிய மார்பகங்களை விரும்பத்தாகாதவகையில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் ஏதோ தவறான விஷயம் நடக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. நான் அழுதுகொண்டே பாத்ரூம் போக வேண்டும் என்று சொன்னேன். என் வீட்டில் பெரியவர்களை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது என்று கூறியிருந்தனர். மேலும் அவன் பாத்ரூமிற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்த போதும் இதே மரியாதையை காரணமாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.நல்லவேளையாக என் அக்கா அங்கே வந்தததால் அவன் போய்விட்டான். அதற்கு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகுதான் எனக்கு என்ன நடந்தது என்பது புரிந்தது. அதன்பின் அந்த ஆள் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் வெளியே சென்று விடுவேன். இன்னமும் கூட இதைப்பற்றி என் பெற்றோரிடம் நான் சொல்லவில்லை. காரணம் அவன் பேர் கூட தெரியாத போது தவறு யார் பக்கம் என்பது கேள்விக்குறியாகி விடக் கூடாது என்பதற்காகத்தான்.

மனஸ்வி ஜெட்லீ – வெட்டிங் எடிட்டர்

9. அவன் என் அருகே வந்து கொண்டே இருந்தான். என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் என் உதட்டில் முத்தமிட்டான்.

ADVERTISEMENT

அப்போது எனக்கு 19 வயது. வேலை விஷயமாக நாங்கள் பெங்களூர் பயணிக்க வேண்டி இருந்தது. அது குறித்து நான் உற்சாகமாக இருந்தேன். அங்கு ஒரு ஸ்டால் போடப்பட்டு விற்பனையை அதிகரிப்பது எங்கள் வேலை. இதற்காக நானும் என்னோடு ஒரு பெண்ணும் 3 ஆண்களும் (விற்பனை பிரதிநிதிகள்) எங்களுடன் வந்தனர். வேலை முடிந்த உடன் வேறு சில நண்பர்களை நானும் என் தோழியும் சந்திக்க நினைத்தோம். சந்தித்தோம் லேசாக மது அருந்தினோம். ஹோட்டலுக்கு வந்த உடன் என் தோழி உடனே தூங்கி விட்டாள். நாங்கள் குடிப்பதை பார்த்த எங்கள் சகபணியாளர் விற்பனை பிரதிநிதி ஒருவன் எங்களை பின் தொடர்ந்து ரூமிற்குள் வந்தான். என் தோழி தூங்கி விட்டதால் அவளை எதுவும் செய்யாத அவன் என்னைப் பார்த்தான். மது அருந்தி இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவன் நினைத்து விட்டான். நான் சுயநினைவின்றி இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டு என்னை நெருங்கினான். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் முன் என் உதடுகளில் முத்தமிட்டான். அவனுக்குத் திருமணம் ஆகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அருவெறுப்போடு அவனைத் தள்ளி விட்டேன். அங்கிருந்து வெளியேறும்படி கத்தினேன். ஆனால் அவன் அசையாமல் நின்றிருந்தான், பின்னர் வெளியேறினான். இரண்டு வாரங்கள் இந்த விஷயத்தைப் பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. என் அக்காவிடம் இதைப்பற்றி பேசியபோது அவள் கோபப்பட்டாள் . என் முதலாளியிடம் நடந்ததைச் சொல்லி அந்த ஆளை வேலையை விட்டு அனுப்ப செய்தாள் .

சிருஷ்டி சபர்வால் – சீனியர் பாஷன் ரைட்டர்

 

10. ஒரு முறை அது போல நடந்து விட்டால் அடுத்தமுறை அந்த வழியாகப் போகவே நாம் பயப்படுகிறோம் என்பது மிகக் கவலையான விஷயம். 

ADVERTISEMENT

அப்போது எனக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. நானும் என் அக்காவும் ஷவர்மா வாங்குவதற்காக சாலையைக் கடக்கவேண்டி இருந்தது. அக்கா அதற்காக நடைபாதையை தேர்ந்தெடுத்து நடந்து கொண்டிருந்தாள். நான் அவள் பின்னால் சென்று கொண்டிருந்தேன். திடீரென அக்காவை எங்கோ தவற விட்டு விட்டேன். அதற்குள் ஒரு இளைஞன் என் அருகே வந்து என் மார்பகங்களை அழுத்தி விட்டு ஒரு அசிங்கமான கமெண்ட் கொடுத்துவிட்டு சென்று விட்டான். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் அக்காவிடமும் எதுவும் சொல்லவில்லை. வீட்டிற்கு சென்று அழுது கொண்டிருந்தேன். அதன் பின் சில நாட்கள் கழித்து நான் என் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். மற்ற நண்பர்களிடமும் சொன்னேன். அவர்கள் அனைவரும் நான் அப்போது எப்படி எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். அன்றில் இருந்து எப்போதெல்லாம் அந்த நடைபாதையை நான் கடக்கிறேனோ அப்போதெல்லாம் இந்த சம்பவம் மனதில் வந்து போகிறது. அன்று அப்படி செய்தவனை மறுபடியும் பார்த்தால் அவனை சும்மா விடக் கூடாது என்று மனதில் வெறி தோன்றும். ஒரு முறை அது போல நடந்து விட்டால் அடுத்தமுறை அந்த வழியாகப் போகவே நாம் பயப்படுகிறோம் என்பது மிகக் கவலையான விஷயம். ஒழுக்கத்தை உடைக்கிற விஷயமும் கூட. இதெல்லாம் நம்மை இப்படி செய்யும் ஆண்களுக்கு உரைப்பதில்லை. நமக்கு எப்படிப்பட்ட பாதிப்பை அவர்கள் வழங்குகிறார்கள் நம் மனது எப்படி சிதைந்து போகிறது என்பது பற்றிய கவலைகள் அவர்களுக்கு இல்லை. ஆகவே இதைப்படிக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு ஆணாக இருக்கும்பட்சத்தில் இது போன்ற சூழலில் ஒரு பெண் சிக்கிக் கொள்ளும்போது அவளுக்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அதே போல பெண்களே நீங்கள் இப்படி சம்பவத்தில் மாட்டிக் கொண்டால் உடனடியாக அவன் கன்னத்தில் ஒரு பலமான அறை வைக்கவோ அல்லது அவனது உறுப்பை நோக்கி ஒரு உதை விடவோ தயங்காதீர்கள். ஏனென்றால் இது போன்ற ஆண்களை நாம் சும்மா போக விடக்  கூடாது.

கேத்லின் சென் – லைஃப் ஸ்டைல் ரைட்டர்.

11. “இதுக்கு முன்னால இப்படி பண்ணிருக்கோம்ல இப்ப மட்டும் என்ன தப்புனு சொல்ற”

பள்ளிப் படிப்பிற்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது நான் கல்லூரியை முடித்திருந்தேன். அந்த சந்திப்பிற்கு என் பழைய நண்பர்களுடன் செல்லலாம் என நான் முடிவு செய்திருந்தேன். என் எக்ஸ் உடன் (முன்னாள் காதலன்) நான் நட்பில் இருந்தேன். அவனும் அங்கு வந்திருந்தான். பார்ட்டி முடிய நேரம் ஆகிவிட்டதால் அவன் என்னை வீட்டில் விட்டு விடுவதாகக் கூறினான். தனியாக போவது பாதுகாப்பல்ல என்றும் கூறினான். அந்த நேரத்தில் டாக்சியோ ஆட்டோவோ எதுவும் வரவில்லை. பள்ளியில் இருந்து 3km தூரத்தில் என் வீடு இருப்பதால் அவன் நடக்கலாம் என்றான். நானும் அவனும் நடந்து வந்தோம். என் வீடுஇருக்கும் பகுதிக்கு வந்ததும் வீடு வரை வருகிறேன் என்றான். நான் பரவாயில்லை அது அவசியமும் இல்லை நானே போகிறேன் என்றும் கூட அவன் என்னோடு வந்தான். திடீரென என் வீட்டிற்கு அருகில் ஒரு சுவர் மீது என்னை தள்ளினான். அதன் பின் முத்தமிட ஆரம்பித்தான். நான் வேண்டாம் என்று கூறியும் அவன் என்னை விடவில்லை. என் முழு சக்தியையும் பிரயோகித்து அவனை நான் கீழே தள்ளிவிட்டு என் வீடு நோக்கி ஓடினேன். அவனை நான் திரும்பி பார்க்கவே இல்லை. என் முன்னாள் காதலனே என்னை பலாத்காரம் செய்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின் “இதுக்கு முன்னாலயும் இப்படி பண்ணிருக்கோம்ல. இப்ப மட்டும் ஏன் தப்புனு சொல்ற ” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். என்னை வீட்டில் விடுவதாக அவன் இவ்வளவு தூரம் நடந்து வந்திருப்பதால் என்னால் பதிலுக்கு செய்ய முடிந்த சிறு உதவியாக அவன் இதை நான் செய்வேன் என்று எதிர்பார்த்ததாகக் கூறினான். இதற்கிடையில் வீட்டில் நான் நடுங்கிக் கொண்டிருப்பதையும் அழுது கொண்டிருப்பதையும் என் பெற்றோர் பார்த்து விடாத வண்ணம் நான் என் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டேன். அதன் பிறகு அவன் பலமுறை மன்னிப்பு கேட்டான். என்னால் அவனை மன்னிக்கவும் முடியவில்லை அந்த நிகழ்ச்சியை மறக்கவும் முடியவில்லை.

ADVERTISEMENT

 

சாயுன்க்தா ஜெயின் – சீனியர் பாஷன் ரைட்டர்.

 

ADVERTISEMENT

12. வருடா வருடம் இது தொடர்ந்து கொண்டிருக்கும். நான் உறவினர் வீட்டுக்கு செல்லும்போதோ அல்லது அவர்கள் இங்கே வரும்போதோ நடந்து கொண்டே இருந்தது. இதனை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

என் குடும்ப உறுப்பினர் ஒருவரால் நான் தொடர்ந்து 7 வருடமாக பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எனக்கு இன்னதுதான் நடக்கிறது என்று கூடப் புரிந்து கொள்ள முடியாத பருவம் அது. அவன் என் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றவன். பர்பெக்ட் பையன் எனும் பெயர் எடுத்தவன். யாரும் அவன் மீது எதிலும் குறை சொல்லவே முடியாது. எனக்கு எட்டு வயதிருக்கும்போதில் இருந்து அவன் என்னை தொடர்ந்து பலவந்தப்படுத்தி வந்திருக்கிறான். அப்போதெல்லாம் எனக்கு இது புரியாவிட்டாலும் பிடிக்கவில்லை. அதன்பின் என் 15வது வயதில் இதைப்பற்றி தைரியமாக நான் வீட்டில் சொன்னபோது அவர்கள் அனைவரும் அவன் அப்படிப்பட்டவன் அல்ல .நீ அவனை அவனது அக்கறையைத் தவறாக புரிந்திருக்கிறாய் என்றுதான் சொன்னார்கள். என்னை யாரும் நம்பவில்லை. அதன்பின் நான் வீட்டில் இதுபற்றி பேசுவதை நிறுத்தி விட்டேன். ஒருமுறை அதனை நிரந்தரமாக நிறுத்தும் நேரம் வந்தது. அவன் வழக்கம் போல யாருமற்ற போது பலவந்தமாக என்னை கட்டிலில் தள்ள நினைக்கையில் அவனை என் முழங்கால்களால் தாக்கினேன். அதோடு சரி. அதன்பின் அதுபோல நடக்கவில்லை. தன் பல வருட பலாத்காரத்தை இரண்டு சாக்லேட் கொடுத்து மன்னிப்பு கேட்க அவனால் முடிந்திருந்தது.

இது நடந்து 9 ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்போது வரை பெற்றோரிடம் சொல்ல மனது வரவில்லை. இதனால் அவர்கள் சொந்தம் பாதிக்கப்படலாம் மேலும் எப்போதோ நடந்து முடிந்த ஒரு விஷயத்தை மீண்டிடும் பேசுவதால் நடந்தது சரியாகி விடாது என்பதால் நான் இதைப்பற்றி யாரிடமும் இப்போது வரை பேசியதில்லை.

(பெயர் சொல்ல விரும்பாதவர்)

ADVERTISEMENT

பாலிவுட்டில் மிடூ இயக்கத்தின்  தாக்கம்

ஹாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட மிடூ இயக்கம் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, அச்சுறுத்தல் போன்ற முக்கிய காரணங்களால் ஈர்க்கப்பட்டு உலகில் பல்வேறு இடங்களில் பரவி மும்பை வந்தடைந்தது.  தனுஸ்ரீ தத்தா நானாபடேகர் மீது அளித்த பாலியல் புகாரினால் மும்பையில் மிடூ இயக்கம் பிரபலம் அடைந்தது. ஆரம்பத்தில் அதிகப்பேரால் கவனிக்கப்படாத இந்தப் புகார் பத்திரிகையாளரும் டாக் ஷோ நடத்துபவருமான ஜெனிஸ் செக்யூரியா இதற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து சுலபமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தனுஸ்ரீ யின் அந்த மோசமான நிகழ்வை அருகில் இருந்து பார்த்த சாட்சியாக ஜெனிஸ் இருந்ததால் இவரது ஆதரவு முக்கியமான ஒன்றாக இருந்தது. படப்பிடிப்பில் நடந்த நிகழ்வை நினைவுகூறியிருந்தார் ஜெனிஸ். இதே போல அதே படத்தில் துணை இயக்குநராகப் பணி புரிந்த ஷைனி ஷெட்டியும் இந்த நிகழ்வு உண்மைதான் என்று தனது ஆதரவையும் தெரிவித்தார்.

அதன் பின்னர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் மற்றும் பர்கான் அக்தர் போன்றோர் தனுஸ்ரீக்கு ஆதரவு அளித்தனர். அதன் பிரதிபலனாக பல்வேறு நடிகர்கள் இந்த புகாரை சந்தித்தனர். காமெடி நடிகர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். ஒருவர் பின் ஒருவராக பாலிவுட்டின் மிக பெரிய இடத்தில இருக்கும் பிரபலங்கள் மீது metoo வின் மூலம் பாலியல் அச்சுறுத்தல் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இருப்பதிலேயே பாலிவுட் பெண்கள் தான் அதிக அளவில் இது குறித்து தைரியமாகப் புகார் தெரிவித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதன் பட்டியல் இதோ.

நானா படேகர்

பிரபல நடிகரான நானாபடேகர் மீது 2008ல் இது பற்றிய புகார் எழுந்தது. ஹார்ன் ஓகே ப்ளீஸ் எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நானாபடேகர் சக நடிகை தனுஸ்ரீ தத்தாவை ஒரு பாடல் காட்சியின் போது தவறான இடங்களில் தொட்டதாக  புகார் கூறப்பட்டது. தனுஸ்ரீ இதைப்பற்றி சக குழுவிடமும் நடன இயக்குனரிடமும் புகார் அளித்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

தனது புகார் யாராலும் கண்டுகொள்ளப்படாததை அடுத்து தனுஸ்ரீ தத்தா இந்த வருடம் மிடூ  இயக்கத்தின் மூலம் மீண்டும் இதனை உயிர்ப்பித்தார். தன் மீதான புகாரை மறுத்த நானா படேகர் தனது வக்கீலின் மூலம் தனுஸ்ரீ தத்தா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது!

ADVERTISEMENT

சஜித் கான்

ஹவுஸ் புல் பட இயக்குனர் சஜித் கான் மீதும் எண்ணிலடங்கா நடிகைகள் மற்றும் பெண்கள் மூலம்  பாலியல் புகார் எழுந்தது. சலோனி சோப்ரா இவரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சஜித் கானின் சுயரூபத்தை இவர்தான் தனது வலைதளத்தின் மூலம் வெளிக் கொணர்ந்தார். நடிகை ரேச்சல் ஒயிட் மற்றும் பத்திரிகையாளர் நிருபமா உபாத்யாய் ஆகியோரும் சஜித் மீது புகார் அளித்தனர்.

இந்த புகார்களுக்கு ஆதரவளித்த நடிகர் அக்ஷய் குமார் ஹவுஸ் புல் நான்காவது பாகத்தில் இருந்து சஜித் கானை நீக்க செய்தார். சஜித்திற்கு பதிலாக பார்ஹாத் சம்ஜி இதனை இயக்குகிறார்.

ADVERTISEMENT

அலோக் நாத்

பாலிவுட்டில் ஒழுக்கத்திற்கும் பண்பிற்கும் நாகரிகத்திற்கும் பெயர் போனவரான அலோக் நாத் மீது தாரா இயக்குனர் வினிதா நந்தா மற்றும் நடிகை சந்தியா மிருதுள் ஆகிய இருவரும் தங்களிடம் அலோக் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தனர். வினிதா அலோக் நாத் ஒரு பார்ட்டிக்குப் பிறகு தனது வீட்டில் வைத்தே தன்னை எப்படி பலத்காம் செய்தார் என்பதை குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் சந்தியாவும் இதே போன்ற ஒரு பலவந்தத்தைப் பற்றி கூறியிருந்தார்.

ADVERTISEMENT

உத்சவ் சக்ரபர்தி

இந்தியாவில் முன்னணியில் வர வேண்டிய காமெடி நடிகர்களில் ஒருவரான உத்சவ் சக்ரபர்தி மீது அவர்களது தனிப்பட்ட சானெல் AIB யின் சக எழுத்தாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தேவையற்ற ஆபாசமான குறுஞ்செய்திகளை இவர் அனுப்பியதாக புகார் கூறப்பட்டது. இதனால் சானெல் ஆரம்பித்தவர்களான தான்மே பட்  மற்றும் குருசிம்ரன் கம்பா ஆகியோர் சில பிரச்னைகளை சந்தித்தனர், இறுதியில் தன்மயி தனது பதவியை ராஜினாமா செய்தார். குருசிம்ரன் இந்த பரபரப்பு அடங்கும் வரை வெளியில் வராமல் அமைதியோடு இருக்க வேண்டி வந்தது.

விகாஸ் பால்

ADVERTISEMENT

தயாரிப்பாளரும், இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான விகாஸ் பால் மீது அவரது படக்குழுவை சேர்ந்த ஒரு பெண் புகார் அளித்தார். குயின் படத்தின் படப்பிடிப்பின் போது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாகத் தெரிவித்தார். அதில் விகாஸ் தன்னை ஷூட்டிங் முடித்து இறக்கி விட வந்தபோது அப்பெண்ணின் இருப்பிடத்திற்கு முன்பாகவே குடித்ததாகவும் அதன்பின் அந்தப் பெண் முன்னிலையில் சுய இன்பம் கண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதே படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத்தும் விகாஸின் சில செயல்கள் விசித்திரமானதாகவும் தவறாகவும் இருந்ததாக கூறி இருந்தார். இதனை அடுத்து பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கங்கானாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

வருண் குரோவர்

திரைப்பிரிவில் பாடலாசிரியர் , திரைக்கதை எழுத்தாளர் மற்றும் காமெடியனுமான வருண் குரோவர் 2001ல் ரிகர்சல் நேரத்தில் ஒரு பெண்ணை வேண்டுமென்றே பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சாக்ரெட் கேம்ஸ் இன் எழுத்தாளர் வருண் தன் மீது போடப்பட்ட புகாரை மறுத்தார். உடனடியாக இணையம் வாயிலாக தன் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டது என்று கூறினார். இதனால் அந்த ஷோ வெளியிடுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. அந்த ஷோவின் ஒரு இயக்குனரான அனுராக் காஷ்யப்பும் வருண் மீதான புகார்களை நம்புவதற்கு மறுப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நவாசுத்தின் சித்திக்

ஆரம்பத்தில் சித்ராங்கதா சிங் கிற்காக குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாபுமொஸாய் பாண்டூக்பாஸ் எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சித்ராங்கதாவிற்கு விருப்பமற்ற காட்சி ஒன்றில் நடிக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அந்த சமயத்தில் நவாஸ் தனக்கு என்ன பிரச்னை நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் சித்ராங்கதா அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் நவாஸ் நடித்த மிஸ் லவ்லி படத்தின் சக நடிகை நிகாரிகா சிங் நவாஸ் மீது மற்றுமொரு புகார் அளித்தார். தங்கள் இருவருக்கிடையேயான உறவை பற்றி நவாஸ் தனது திரை வாழ்க்கை பாதிக்கபடாவண்ணம் அதனை உண்மைக்கு மாறாக கூறியதாக இவர் நவாஸ் மீது புகார் அளித்திருந்தார். ஒருமுறை நவாஸ் தன்னை பலவந்தப்படுத்தியதையும் அதற்கு தான் உடன்பட்டதையும் இவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

 

இந்தியாவில் திரைப்பிரபலங்களைத் தொடர்ந்து மி டூ  இயக்கத்தின் மூலம் புகார் அளிக்கப்பட்டவர்கள்

எம். ஜே. அக்பர்

முன்னாள் தொழிற்சங்க அமைச்சராக இருந்த எம் ஜே அக்பர் மீது 14க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்திருந்தனர். சிறந்த பத்திரிகையாளர்களான சுபர்ணா ஷர்மா மற்றும் ப்ரியா ரமணி ஆகியோரும் இதில் அடக்கம். இதன்பின் இவர் மீது அலுவலகத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. பிரியா ரமணி ஒரு ஓட்டலில் வைத்து அக்பர் தன்னை முத்தமிட முயன்றதையும் தனக்கு மசாஜ் செய்ய விரும்புவதாக கூறியதையும் வெளிப்படையாகவே புகார் அளித்திருந்தார். மற்றொரு பெண்ணோ அலுவலக வேளைகளில் அக்பர் தங்களின் மார்பகங்களை வெறித்து பார்ப்பதை பற்றியும் அசிங்கமாக கமெண்ட் செய்வதை பற்றியும் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஜட்டின் தாஸ்

பிரபல ஓவியரும் பிரபல நடிகை மற்றும் இயக்குனருமான நந்திதா தாஸின் தந்தையும் கூட இந்த பாலியல் புகாரில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு தினசரி பத்திரிகையின் துணை நிறுவனர் இவர் மீது புகார் அளித்திருந்தார். நிஷா போரா எனும் அப்பெண்மணி பல்வேறு இடங்களில் ஜட்டின் தாஸ் தன்னை சூறையாட முயற்சித்ததாக புகார் அளித்தார். ஆனாலும் அப்புகார்களை தாஸ் மறுத்தார்.

ADVERTISEMENT

வினோத் துவா

திரை இயக்குனர் நிஷ்டா ஜெயின் வினோத் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்ந்தது போன்ற குற்றங்களை முன் வைத்தார். சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகியிருந்தும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். காரணம் வினோத்தின் மகள் மல்லிகா துவா பல ஆண்கள் மீதும் சரமாரியாக என்னை டேட்டிங் அழைத்தார் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பது பற்றியான செய்திகளை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டு வந்தார். தன் அப்பாவின் மீதான இந்த புகார் பற்றி கூறுகையில் என் அப்பா உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் இந்த நிகழ்வு உண்மையிலேயே வேதனைக்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அபிஜித் பட்டாச்சார்யா

ADVERTISEMENT

90களில் பல கிளாசிக் பாடல்களை பாடிய பாடகர் அபிஜித் மீது முன்னாள் விமானப்பணிப்பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். அபிஜித் அப்பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அபிஜித்தோடு அவர் டான்ஸ் ஆட மறுத்ததால் அப்பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் நீ அசிங்கமாக இருக்கிறாய் குண்டாக இருக்கிறாய் என்று தகாத வார்த்தைககளில் அபிஜித் திட்டியதாக தெரியவருகிறது.

ஹாலிவுட்டில் மிடூ வில் மாட்டிய சில முக்கிய பிரபலங்கள்

ஹாலிவுட்டில் பல்வேறு பிரபலங்கள் ஆஸ்கர் மற்றும் அகாடமி விருது வெற்றியாளர்கள் ஆகியோர் பலர் இந்த மிடூ விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் முக்கியமான சிலரைப்பற்றிய பட்டியல் உங்களுக்காக.

ADVERTISEMENT

ஹார்வி வெய்ன்ஸ்ட்டின்  

ஹாலிவுட்டின் மிக முக்கிய தயாரிப்பாளரான இவர் மீது 2017ஆம் வருடம் அலிஸா மிலானோ பாலியல் புகார் அளித்தார். இதற்குப் பின் இவர் போன்று ஹார்வியால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளித்தனர். எக்ஸ் மென் படத்தில் நடித்த ஜெனிஃபர் லாரன்ஸ் மற்றும் அயர்ன் மென் படத்தில் நடித்த க்வெந்த் பால்ட்ரோ ஆகியோர் உள்பட பலர் புகார் அளித்தனர்.

ஹாலிவுட்டின் பெரும்பாலான பிரபலங்கள் இந்த பெண்களுக்கு ஆதரவாகவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் நடவடிக்கைக்கு எதிராகவும் ஒன்று திரண்டனர். டைம்ஸ் அப் இயக்கம் இதற்க்கு முக்கிய உறுதுணையாக இருந்தது.

ADVERTISEMENT

கெவின் ஸ்பெசி

இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்ற பிரபல நடிகர் கெவின் ஸ்பெசி மீதும் மிடூ இயக்கம் மூலம் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டது. இதனை அளித்தவர் அந்தோணி ராப் எனும் நடிகர். தனது 14வது வயதின் போது ஒரு பார்ட்டியில் கெவின் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் அளித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கெவின் பல வருடங்களுக்கு முன் நடந்தது தனக்கு நினைவில் இல்லை என்றும் ஆனால் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் கூறியிருந்தார். இதன்பின் நெட்பிலிக்ஸ் தனது பிரபல தொடரான ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சில் இருந்து கெவினை நீக்கியது.

ஆசிஷ் அன்சாரி

ADVERTISEMENT

இவர் மீது அதிக அறிமுகமில்லாத பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். ஒரு இணையதளத்தின் வழியாக ஆசிஷ் தன்னை பலமுறை பலவந்தப்படுத்தியதாக அவர் கூறியிருந்தார். ஆசிஷ் இது இருவருடைய சம்மதத்துடன் நடந்தது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜானி டெப்

ஜேகே ரௌலிங்கின் வாசகர்களுக்கும் ஹாரிபாட்டரின் ரசிகர்களுக்கும் இந்த படங்களின் வரிசையில் உரிமையாளர் ஆக ஜானி டெப் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யம் அளித்தது. குடும்ப வன்முறை குற்றத்தில் தண்டனை பெறுவதற்கு பதிலாக அவருக்கு பண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் மற்றும் வேர் டு பைண்ட் தெம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நடிகை ஆம்பர் ஹியர்ட் டெப்பின் மனைவி ஆவார். தொடர்ந்து தான் வார்த்தைகளாலும் உடலாலும் ஜானி டெப்பால் காயப்படுத்தப்பட்டதாகவும் தனது திருமண வாழ்வு நிறைவாகவே இல்லை என்றும் இவரோடு வாழ்வதில் இருந்து தடை வேண்டும் என்று 2016ல் தடை உத்தரவு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எட் வெஸ்ட்விக்

வெற்றி பெற்ற தொலைக்காட்சி தொடரான காசிப் கேர்ள் தொடரில் நடித்த எட் வெஸ்ட்விக் 2014ஆம் ஆண்டு நடிகை கிறிஸ்டினா கோஹனை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். கிறிஸ்டினா எட் டின் வீட்டில் தான் தூங்கி கொண்டிருக்கும்போது எவ்வாறு எட் மூலம் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை விவரித்திருந்தார். எட் வெஸ்ட்விக் தனக்கு எதுவும் நினைவில்லை என்று கூறியிருந்தார். இதே முறையில் எட் தங்களையும் பலாத்காரம் செய்ததாக இரு வேறு பெண்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

 

 —

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT

 

 

 

17 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT