உங்கள் 9 மாத காத்திருப்புக்கு பின் இதோ உங்களுக்கான உயிர் உங்கள் கைகளில். பூக்களால் போர்த்தப்பட்டு உங்கள் கைகளில் கிடைக்கும் உங்கள் மகவு உங்களின் பெண்மையையும் தாய்மையையும் உணர வைக்கும் ஒரு அற்புத வரம்.
இந்த 9 மாதங்ககளில்தான் இந்த வரத்திற்காக எத்தனை விதமான தவங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள்! நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் பூரிக்கும் சந்தோஷ தியாகங்கள் அவை.
இத்தனைக் கால காத்திருப்புக்கு பின் உங்கள் உயிரின் ஒரு பாகமாய் உங்கள் குழந்தை உங்கள் கைகளில் வந்தாயிற்று. இனி உங்கள் வேலை எல்லாம் உங்களையும் உங்கள் குழந்தையின் உடல் நலத்தையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதுதான்.
இந்த ஒன்பது மாதமாக உங்களின் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரித்திருக்கும். உங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த எடை அதிகரிப்பு அவசியம் தேவை. சராசரி பிஎம்ஐ கொண்ட ஒரு பெண்ணிற்கு 11.5ல் இருந்து 12கிலோ வரை உடல் எடை அதிகரிப்பு நிகழக் கூடும். இந்த உடல் எடை குழந்தையின் வளர்ச்சி, மார்பக திசுக்கள், நஞ்சுக்கொடி, அமினோ அமில திரவம், கருப்பை மற்றும் கொழுப்பு சேரும் பகுதிகள் ஆகியவை மூலம் ஏற்படுகிறது.
ஆகவே ஒரு உயிரை நீங்கள் தாங்கி அதனை இவ்வுலகத்திற்கு கொண்டு வர எவ்வளவு பொறுமையாகக் காத்திருந்தீர்களோ அதே அளவு பொறுமையை உங்கள் எடை குறைப்பதிலும் காட்ட வேண்டும். வேக வேகமாகக் குறைக்கக் கூடாது. இதனால் ஆரோக்கியக் கேடுகள் நிகழும். குழந்தையையும் அது பாதிக்கலாம்.
ஆகவே பெண்கள் தங்கள் உடல் எடைகுறைப்பிற்கான உடற்பயிற்சிகளை பிரசவம் ஆனபின் 40 நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்கலாம்.
எப்படியிருந்தாலும் இந்த பிரசவத்திற்குப் பின்பான உடல் எடைக் குறைப்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய விஷயங்கள் உள்ளது. அதற்காக இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.
இந்த எடைக்குறைப்பு ஏன் மிக மெதுவாக நடக்க வேண்டும்?
எழுத்தாளரும் யோகா பயிற்சியாளருமான சீமா சோந்தி குழந்தைப்பேற்றிற்குப் பின்பான உடல் எடைக்குறைப்பு மிகவும் நிதானமாகவும் அதே சமயம் சீராகவும் நடைபெறவேண்டும் என்கிறார். ஏனெனில் உடல் எடை 9 மாதங்கள் நிதானமாகவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருக்கிறது எனும்போது அதனை சட்டெனக் குறைப்பது உடல்நலத்திற்குப் பெரிய தீங்காக மாறும் என்கிறார். எடை அதிகரிக்க எடுத்துக் கொண்ட அதே கால அளவில் சிறிது சிறிதாக உடல் எடை குறைப்பது நல்லது என்கிறார்.
குழந்தைப்பேறிற்குப் பின்பான காலம் என்பது மிக முக்கியமான காலமாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் மனதளவிலும் உடளவிலும் கடந்து வந்த வலிகள் வேதனைகள் அளவிட முடியாதது. அவற்றின் காயங்கள் ஆற சிறிது காலம் ஆகும். பிரசவத்திற்குப் (pregancy) பின்பான முதல் 40 நாட்கள் தாய்மைக்கு முக்கியமான காலம். பெண்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல ஒய்வு எடுத்து மனதளவிலும் உடல் அளவிலும் தங்களை சீராக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் உடல் எடை குறைப்பிற்காக உணவை சரியாக சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் உடல் எடைகுறைவு என்பது உங்களது ஆரோக்கியத்தில் சீர்கேடுகளை ஏற்படுத்தி விடும்.
தாய்ப்பாலும் உடல் எடைக்குறைப்பும்
நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் நிச்சயமாக நீங்கள் வழக்கமாக உண்பதை விட 300 கலோரி அளவில் சரியான ஊட்டச்சத்துள்ள உணவினை நீங்கள் உண்ண வேண்டும். ஆகவே நீங்கள் தாய்ப்பால் கொடுத்துவரும் சமயத்தில் டயட் இருப்பது நல்லதல்ல. இருப்பினும் நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 500 கலோரிவரை உங்கள் எடைக்குறைப்பு நிகழ்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. மேலும் நீங்கள் மீண்டும் ஒருமுறை கருவுற விரும்புபவராயின் உங்களது எடை ஆரோக்கியமான வகையில் இருப்பது அவசியம் என்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும்போது டயட் செய்யலாமா
உங்கள் குழந்தையின் ஆயுளுக்கும் தேவையான அடிப்படை சத்துக்கள் உங்கள் தாய்ப்பால் மூலம்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறது. ஆகவே அந்த நேரத்தில் நீங்கள் டயட் இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.அந்த நேரத்தில் நீங்கள் எடைகுறைப்பிற்கான மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவே கூடாது.
சீதாராம் பாரதிய மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் ரிங்கு சென்குப்தா பெண்கள் இந்த நேரங்களில் தாங்கள் என்ன மாதிரியான உணவு உண்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாகவே அவர்கள் சாப்பிடுவது அவசியம் என்கிறார்.
அதே சமயம் அளவுக்கதிகமான உணவு உண்பதோ அல்லது உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு நிறைந்த உணவு உண்பதும் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் நிறைந்த சரிவிகித உணவை இந்த நேரத்தில் பெண்கள் எடுத்துக் கொள்வது அவசியம் என்றும் மேலும் இந்த நேரங்களில் திரவ வகை உணவுகளை அவர் எடுத்துக் கொள்வது நல்லது என்றும் அவர் கூறுகிறார்.
யோகா குருவான சீமாவும் இதையேதான் வலியுறுத்துகிறார். மேலும் அவசர உடல் எடைக்குறைப்பும் சரியாக சாப்பிடாமல் இருப்பதும் தாய் மற்றும் குழந்தை இருவரின் உடல்நலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம் என்று கூறுகிறார். ஏனெனில் உங்கள் உடல் பொலிவாக அழகாக மிளிர்வதை விடவும் மிக முக்கியமானது உங்கள் ஆரோக்கியம் என்கிறார்கள்.
எப்போதில் இருந்து உங்கள் எடைகுறைப்பைத் தொடங்கலாம்
உங்கள் பேறுகாலம் முடிந்த 40வைத்து நாளில் இருந்து உங்கள் உடற்பயிற்சிகளை மெல்ல மெல்ல தொடங்கலாம். மருத்துவர் சென்குப்தாவின் கூற்றுப்படி ஒரு சுகப்பிரசவமான ஒரு பெண் எளிதான உடற்பயிற்சிகள் சிலவற்றை செய்யத் தொடங்கலாம். உதாரணமாக நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் முதலியனவற்றை ஆரம்பிக்கலாம். அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் மருத்துவரின் அனுமதியுடன் அவர்கள் சொல்லும் வரை காத்திருந்து அதன் பின் எளிய உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த அதன் ரணம் ஆறவே கொஞ்ச காலம் பிடிக்கும். அதன்பின் உங்கள் உடல் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு தருகிறதோ அந்த அளவிற்கு நீங்கள் உடற்பயிற்சிகளை தொடங்கலாம். உங்கள் உடலால் எவ்வளவு முடியும் என்பதை அதுவே சொல்லிவிடும் ஆகவே அதுவரை முயற்சிப்பதுதான் நல்லது. அதனைத் தாண்டி தீவிரமாக முயற்சிக்கக்கூடாது.
பிரசவத்திற்குப் பின் உடல் எடை குறைப்பது எவ்வளவு முக்கியமானது
உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இருந்தால் உடல் எடை குறைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதிகப்படியான உடல் எடை உங்கள் இரண்டாவது கருத்தரிப்பிற்கு பெரிய தடையாகவே மாறிவிடும். அதனால் பிரசவ வலி அதிக நேரம் இருக்கும், குழந்தையை வெளியே தள்ளுவதில் சிரமம் ஏற்படும் மேலும் அது அறுவை சிகிச்சைக்கும் வழிவகுக்கலாம்.
மேலும் இந்த வகை உடல் பருமனால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும். அதனை ஒட்டி ஒரு சில உறுப்புகள் செயல் இழப்பும் நடக்கலாம். ஆகவே பிரசவத்திற்குப் பின்பான உடல் எடை குறைப்பு நிச்சயம் தேவையான ஒன்றுதான்.
உங்கள் வாழ்க்கையை அழகானதாக்க மேலும் உங்களுக்கு பிரசவத்திற்குப் பின் சுலபமாக செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் சிலவற்றை இங்கே தருகிறோம்
(மருத்துவரின் ஆலோசனையோடு இதனை முயற்சிக்க வேண்டும். சுகப்பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பின்பும் அறுவைசிகிச்சை எனில் இன்னும் சில காலம் கழித்தும் இவ்வகை உடல்பயிற்சிகளை நீங்கள் முயற்சிக்கலாம்.)
நடைப்பயிற்சி
மிக மெதுவான நடையில் ஆரம்பித்து நடுத்தரமான நடை வரை நீங்கள் நடக்க முயற்சிக்கலாம். எடுத்த உடனே வயிற்றுப் பகுதியை குறைக்க வேண்டும் என்று முழு கவனத்தையும் அதில் வைக்க வேண்டாம். நடப்பதன் மூலம் உடலின் மொத்த எடையும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
ஏரோபிக்ஸ்
நடக்க ஆரம்பித்து சில நாட்களில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மேம்படுவீர்கள். அதன் பின்பு சில ஏரோபிக்ஸ் பயிற்சிகளை நடைப்பயிற்சிக்கு இடையில் நீங்கள் செய்யத் தொடங்கலாம்.
உடல் வலுவிற்கான பயிற்சிகள்
அதன் பின் இறுதியாக உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்கக் கூடிய பயிற்சிகளை நீங்கள் செய்து வரலாம். இரண்டு மூன்று உடற்பயிற்சிகள் இணைந்து சில பயிற்சிகள் செய்யும்போது உங்கள் தசைகள் வலுப்படும். நடப்பதும் ஏரோபிக்ஸ் செய்வதும் இதனோடு சேர்ந்து கீழ்கண்ட வீடியோவில் காணும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலை வலுவாக்கும்.
கால்களைத் தூக்கும் பயிற்சி
தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் கைகளை உங்கள் தோள்களுக்கு நேராக வைக்கவும்.
தரையில் இருந்து மெதுவாக உங்கள் கால்களை உயர்த்தவும்.
பின்னர் மெதுவாக கால்களை இறக்கவும். கால்கள் பூமியில் படும்போது உங்கள் வயிற்றுப் பகுதி மிக சுலபமாக எடை குறைப்பிற்கு தயாராகும்.
ஆரம்பிக்கும் போது இது போல 8 தடவை 2 செட்டாக செய்யவும்.
பாலம் உடற்பயிற்சி
தரையில் படுத்து கால்களை மடக்கிக் கொள்ளவும். பாதங்கள் தரையில் ஊன்றி இருக்க வேண்டும்.
அப்படியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உங்கள் வயிறு நன்றாக உள்ளிழுக்கும் படி இந்த மூச்சு விடும் பயிற்சியை செய்ய வேண்டும். இதைப் போல மூச்சை உள்ளிழுத்தபடியே 5 நொடிகள் இருக்கவும்.
மூச்சை வெளியே விடும்போது உங்கள் இடுப்பு பகுதியை சற்றே மேலே தூக்கவும். இதைப்போல 5 நொடி இருக்கவும். பின் இயல்பு நிலைக்கு வரவும்.
இதைப்போல 8 தடவை 2 செட்டாக செய்யவும்.
அடிப்படை உடற்பயிற்சிகள்
முன்பு செய்ததைப் போலவே தரையில் படுத்து முழங்கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றவும்.
கைகளை தலைக்கு பின்னே கோர்த்துக் கொள்ளவும்.
உங்கள் தலையையும் தோள்களையும் மெல்ல உயர்த்தவும்.
இதைப்போல 8 தடவை இரண்டு செட் ஆக செய்யவும்.
கூடுதல் பயிற்சி
இந்த வீடியோவில் உள்ளதைபோலவே செய்து வந்தால் உங்கள் வயிறு ஆலிலை போல தட்டையாக மாறிவிடும்!
உங்களுக்கு ஒருவரின் துணை தேவை என்பதை மறந்து விடாதீர்கள்
எடைக்குறைப்பின் போது உங்களுக்கு உங்கள் கணவரின் உதவியோ அல்லது குடும்பத்தாரின் உதவியோ தேவைப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் குழந்தையை கவனிக்க அவர்களின் உதவிக்கரம் உங்களுக்கு தேவைப்படும். மருத்துவர் சென்குப்தாவும் இதுபோன்ற பேறுகால எடைக்குறைப்பு நேரத்தில் குழந்தையைக் கவனிக்க மற்றவர் உதவி தேவை என்கிறார்.
பிரசவம் என்பது பெண்ணிற்கு மறுபிறப்பு. இந்த மறுபிறப்பிற்குப் பின் பெண்ணிற்கு தேவையான ஒய்வு தர வேண்டும். புதிதாக பிறந்த குழந்தையை கவனித்தபடியே தன்னையும் கவனித்துக் கொள்வது என்பது இயலாத காரியம். பிரசவத்திற்குப் பின்பான எடைகுறைப்பை அந்த பெண் செய்யாமல் விட்டுவிட்டால் அவருக்கு ரத்தக்கொதிப்பு நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர் சென்குப்தா தெரிவிக்கிறார்.
எடைக்குறைப்பு நேரத்தில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
டயட் செய்வதை தவிர்க்கவும்
ஏற்கனவே குறிப்பிட்டபடி எடைகுறைப்பிற்காக டயட் செய்யக் கூடாது. தாய்ப்பால் ஊட்டும் சமயங்களில் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தாக முடியும் வாய்ப்பிருக்கிறது.
உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கத்தை தொடர வேண்டும்
மருத்துவர் சென்குப்தாவின் கூற்றுப்படி பிரசவம் முடிந்த ஒரு பெண் அதற்கு ஆறு வார காலத்திற்குப் பின் உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உற்சாகமான நடைப்பயிற்சி உங்களின் ஆரம்ப உடற்பயிற்சியாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் உணவு சரிவிகித ஊட்டச்சத்துக்கள் சமமானதாக இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் கொழுப்புகள் கரையும்.
உங்கள் குழந்தை திட உணவை உட்கொள்ள ஆரம்பித்த பின்னர் சிறிது சிறிதாக நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை குறைத்து உடற்பயிற்சிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒன்றே ஒன்றை நீங்கள் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். உங்களை நீங்களே வருத்திக் கொண்டு எதையும் செய்யாதீர்கள். ஒரு பூங்காவில் உங்கள் குழந்தையை தள்ளும் வண்டியில் வைத்து நீங்கள் நடப்பீர்கள் என்றால் அந்த நடை கூட ஒருவித உடற்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவே போதுமானது.
உணவைத் தவிர்க்கக் கூடாது
பிறந்த குழந்தையை கவனித்துக் கொண்டு தன்னையும் கவனித்துக் கொள்வது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. ஆகவே தாய்ப்பால் சமயங்களில் நீங்கள் உங்கள் உணவை தவிர்க்கக் கூடாது. வழக்கமான மூன்று நேர உணவை விட சிறிது சிறிதாக ஆறு வேலை உணவு சாப்பிடுவதும் இடைவேளைகளில் ஆரோக்கியமான பழங்கள் போன்றவைகளை சாப்பிடுவதும் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்யும்.
ஆரோக்கியமான காலை உணவு
காலை நேர உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனை ஆரோக்கியமான உணவாக சரிவிகித சமமான உணவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் அதிகமாகும்.
சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்கி சாப்பிட வேண்டும்
சில சமயம் குழந்தை இருப்பதால் சாப்பிடும் நேரத்தில் அதற்கு ஏதாவது தேவை இருக்கக் கூடும். அந்த மாதிரி நேரங்களில் குழந்தையை கவனிக்க இன்னொருவர் இருப்பின் அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிதானமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.
எதை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
நொறுக்குத் தீனி போன்று எதையாவது சாப்பிடும் பட்சத்தில் அதுபற்றிய கவனத்தோடு இருங்கள். பச்சை குடை மிளகாய், ஆரஞ்சு , ஆப்பிள், வாழைப்பழம், நிலக்கடலை, முட்டை போன்றவை உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். எப்போதும் நார்ச்சத்து அதிகமான உணவையே சாப்பிடுங்கள். பொறித்த உணவை மறுத்து விடுங்கள். இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரத சத்து அதிகம் இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.
திரவ உணவு சாப்பிடுங்கள்
தாய்ப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணிற்கு நீர் சத்து சீக்கிரம் குறைந்து போகும். ஆகவே அதனை சரி செய்ய அடிக்கடி பழ ரசம் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். குறைந்தது நாளொன்றிற்கு 10-12 டம்ளர் நீர் அருந்துங்கள். இது தாய்ப்பால் சுரக்க உதவும். உங்கள் அருகிலேயே ஒரு தண்ணீர் குடுவையில் நீரை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களை அடிக்கடி நீர் குடிக்க வைக்கும் உத்தியாக இருக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா வகை பானங்களை குடிக்கக் கூடாது.
சர்க்கரையை தவிருங்கள்
எடைக்குறைப்பில் உங்கள் கவனம் இருக்கும் என்றால் நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பதும் செயற்கை சர்க்கரையை தவிர்ப்பதும் நல்லது. உங்கள் சர்க்கரை உட்கொள்ளலை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள்.
சரியான தூக்கம்
பிறந்த குழந்தை இருக்கும் வீட்டில் சரியாக தூங்க முடியாது. இருந்தாலும் கணவர் மற்றும் வீட்டில் உள்ள மற்ற குடும்ப நபர்களிடம் அவ்வப்போது குழந்தை கவனிப்பை மாற்றி விட்டு நீங்கள் முழு ஒய்வு எடுக்க வேண்டும். நல்ல தூக்கம் உங்கள் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொறுமையாக அன்றாட வேலைகளைக் கவனியுங்கள்
உங்கள் உடல் எடை அதிகரிப்பை மேற்கொள்ள அதிக காலம் பிடித்தது போலவே உடல் எடை குறைப்பிற்கு சற்று காலம் எடுத்துக் கொள்ள நேரிடும். அப்போது அந்த காலங்களை நீங்கள் பொறுமையோடு கையாளுவது அவசியமாகும். ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப உடல் எடைக்குறைப்பு நடக்கும். உங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் நடவடிக்கைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்த விதத்தை பொறுத்து உங்கள் எடைக்குறைப்பு நடக்கும். ஆகவே பொறுமையாக இருப்பது நல்லது. முக்கிய விஷயம் பிரசவத்தால் இழந்த உங்கள் சக்தியை மீட்டெடுக்க வேண்டும். பொறுமையாக உங்கள் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்
இத்தனைக்கு பின்பும் உங்கள் எடை குறையவில்லையா
ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் உடல் எடை குறையாது. அதற்கான காரணங்கள் இதோ
சரியான தூக்கமின்மை
பிறந்த குழந்தை உள்ள வீட்டில் தூங்க முடியாது. அதற்கு நாள் முழுதும் விடாத கவனிப்பு தேவைப்படும். ஆனால் குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது நீங்கள் தூங்கவில்லை என்றால் உங்கள் சக்தி விரயமாகும். பின்னர் உங்கள் குழந்தையை நீங்கள் கவனித்துக் கொள்ளும் சக்தியை நீங்கள் இழப்பீர்கள். ஆகவே நன்றாக பார்த்துக் கொள்ள கூடிய ஒருவரிடம் உங்கள் குழந்தையை கொடுத்து விட்டு நீங்கள் எடுக்க வேண்டிய ஓய்வை எடுத்துக் கொள்வது அவசியம்.
அதிகப்படியாக உணவு எடுத்துக் கொள்ளுதல்
பேறுகால மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக பொறித்த மற்றும் எண்ணெய் பதார்த்த வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் உங்களுக்கு பசி அதிகம் ஏற்படின் குழந்தை திட உணவிற்கு மாறிய பின்பு நீங்கள் உங்கள் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்தல் நலம்.
ஒன்பது மாத வேலை , ஒன்பது மாத ஓய்வு
ஒருமுறை கருத்தரித்த பின்னர் உங்கள் உடல் ஓயாமல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. உங்கள் குழந்தைக்கான குட்டி சொர்க்கமாக உங்கள் உடல் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள ஓயாமல் உழைத்தபடியே இருக்கிறது. இதனால் உடல் ரீதியாக உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. குழந்தைப் பேறுக்கு பின்னரும் கூட குழந்தையை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் பிரசவ நேரத்திற்கு பின்னர் ஒரு தாய் தன்னை கவனித்து கொள்வது என்பது சிரமமான விஷயம்.
இதில் முக்கியமான விஷயம் பிரசவத்திற்காக ஏற்பட்ட இந்த உடல் மாற்றங்கள் அவ்வளவு சீக்கிரம் போகக் கூடியது அல்ல என்பதுதான். நிச்சயம் இதற்காக ஒரு ஒன்பது மாத காலங்கள் தேவைப்படும். அதுவரை பொறுமையாக இருப்பது அவசியம்.
எல்லாருடைய உடல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மரபணுக்கள் மூலம் ஒருவருக்கொருவர் வித்யாசமான உடல் எடை குறைப்பு நிகழும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில பெண்கள் குழந்தை பிறந்த சில மாதங்களிலிலேயே பழைய எடைக்கு மீண்டு விடுவார்கள். ஒரு சிலரோ உடல் எடை குறைய காலம் எடுத்துக் கொள்வார்கள். அதே போல வேலைக்கு செல்லும் தாய்மார்களின் எடை குறைப்பும் வீட்டில் இருக்கும் தாய்மார்களின் எடை குறைப்பும் நிச்சயம் வித்தியாசப்படும். ஆகவே எடை குறைப்பு விஷயத்தின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களின் இலக்குகளை வைத்துக் கொண்டு ஆரோக்கியமான முறையில் எடைகுறைப்பை நிகழ்த்துங்கள்.
தாயும் சேயும் நலமோடு வாழுங்கள்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.