நைட் ஷிப்ட் செய்வதால் வரும் ஆரோக்கிய குறைவு பற்றிய கவலையா! இந்த பக்கவிளைவற்ற ஆயுர்வேத குறிப்புகள் உங்கள் வாழ்வை மாற்றும்

நைட் ஷிப்ட் செய்வதால் வரும் ஆரோக்கிய குறைவு பற்றிய கவலையா! இந்த பக்கவிளைவற்ற ஆயுர்வேத குறிப்புகள் உங்கள் வாழ்வை மாற்றும்

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் ஆண்களுக்கு சரிநிகர் சமமாக பெண்களும் பணிக்கு செல்கின்றனர். இதில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இரவு பணிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீட்டை காப்பதிலும் வாழ்வாதாரத்திற்கு நேர்மையாய் உழைத்து சம்பாதிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் மட்டும்தான்.


ஆணுக்கு நிகராக இப்படி இரவு நேர வேலை பார்ப்பதில் பல சமயங்களில் உடல் ஆரோக்கியம் பற்றிய கேள்வி வரத்தான் செய்கிறது. ஏனெனில் இயற்கை நம் உடலில் வைத்திருக்கும் கடிகாரத்திற்கு மாற்றாக நாம் ஒன்றை முயன்று கொண்டிருக்கிறோம். ஆகவே இயல்பாகவே இரவு நேர பணிகளில் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.குறிப்பாக ஷிஃப்ட் ஒர்க் ஸ்லீப் டிஸ்ஆர்டர் எனப்படும் சின்ரோமினால் பாதிக்கப்படுவதுண்டு.


இந்த சின்ரோம் ஏற்பட்டவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படலாம்.


கவன சிதைவு
எரிச்சல் மனோபாவம்
முன்கோபம்
தூக்கமின்மை
முடி கொட்டுதல்
வறண்ட பொலிவற்ற சருமம்
தலைவலி
மயக்கம் அல்லது கிறுகிறுப்பு


அதனை பழங்கால ஆயுர்வேத முறைப்படி பக்கவிளைவுகள் இல்லாமல் சரி செய்து கொள்ளலாம் என்பது சந்தோஷமான செய்திதான் இல்லையா!இரவு நேர பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் நோய் பற்றி ஆயுர்வேதா என்ன சொல்கிறது என்றால் தொடர்ந்து இரவில் விழித்தபடியே இருப்பதால் உடலில் வாதம் அதிகமாகி உடல் வறள்கிறது. ஆகவே இரவு பணிக்கு செல்லும் முன் ஒரு டீ ஸ்பூன் நெய் சாப்பிட்டு சென்றால் இதனால் ஏற்படும் உடல்வறட்சியில் இருந்து மீளலாம் என்கிறது ஆயுர்வேதா.


தொடர்ந்து இரவில் தூக்கம் கெடுவதால் மூளை நரம்புகள் அழுத்தத்திற்கு உண்டாகலாம். இந்த அழுத்தத்தை போக்க ஒரு நிம்மதியான உறக்கம் போதுமானது. ஆனால் அது சரியாக வராதவர்களுக்கு சிறந்த மூலிகை நிவாரணியாக அஸ்வகந்தா செயல்படுகிறது.அஸ்வகந்தா உடலுக்கு வலிமை மட்டுமல்ல . நரம்புகளை சாந்தப்படுத்தி உறக்கத்தையும் முழுமையாக தருகிறது. தினமும் உறங்குமுன் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்து நீரிலோ அல்லது தேனிலோ பாலிலோ கலந்து குடித்து விட்டு உறங்கினால் நல்ல உறக்கம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


இரவு நேர பணிக்கு செல்பவர்களுக்கான சில முக்கிய குறிப்புகள்


  • முடி உதிர்தல் மிக பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவதால் உங்கள் கூந்தல் மீதான அதிக அக்கறை உங்களுக்கு அவசியம் வேண்டும். அடிக்கடி தலைக்கு எண்ணெய் வைத்து முடியையும் வேர்க்கால்களையும் மசாஜ் செய்து விடுங்கள். தலைக்கு தேய்க்க சிறந்த எண்ணெயாக பிருங்கி அமலக்கா தைலம் அல்லது ப்ராஹ்மி தைலத்தை உபயோகிக்கலாம்.

  • வேலை நாட்களில் உங்களால் சரிவர உறங்க முடியாவிட்டால் விடுமுறை நாட்களில் கண்டிப்பாக முழு ஓய்வு உங்கள் உடலுக்கு தேவைப்படும். அதனை கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.  • உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் உடலை நல்ல மசாஜ் சென்டரில் வாரம் ஒருமுறை மசாஜ் செய்து கொள்ளலாம். இது உங்கள் உடல் வலியை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை புத்துணர்வுக்குள்ளாக்கும்.

  • சீரற்ற தூக்கம் உங்களுக்கு இருப்பின் நீங்கள் தூங்கும் முன் உங்கள் அறையை மெல்லிய வெளிச்சத்திற்கு கொண்டு வரவும். வேறு எந்த தொந்தரவுகளும் உங்களுக்கு வராதபடி ஒரு அறையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உங்கள் எலக்ட்ரோனிக்ஸ் மொபைல் போன்றவை படுக்கை அருகே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  • மிக எளிய யோகாசனமான வஜ்ராசனம் மற்றும் பிராணாயாமம் போன்றவை உங்களை அமைதியாக வைத்திருக்கும். தினமும் இரண்டு நிமிடம் இதனை செய்து வர உங்கள் கவனம் மேம்படும்.


இரவு நேர பணிக்கு செல்பவருக்கான சில டயட் குறிப்புகள்


பொதுவாக அனைவரும் உண்டு முடித்து உறங்க போகும் நேரத்தில் நீங்கள் வேலைக்கு செல்வீர்கள். அதனால் உணவின் மீது கவனம் இல்லாமல் இருக்காதீர்கள். முடிந்த வரை பணிக்கு செல்லுமுன் உணவை உண்டு விட்டு செல்லுங்கள். அதில்லாமல் நடு இரவுகளில் உணவை உண்டு கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள்.


உங்கள் ஷிஃப்ட் மாலை 4 மணி போல ஆரம்பித்து இரவு ஒரு மணிக்கு முடிகிறது என்றால் நீங்கள் இரவு 7 அல்லது எட்டு மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள்.


இரவு பணிக்கு செல்பவர்கள் சாப்பிட்டால் எங்கே தூங்கி விடுவோமோ என்று பயந்து சாப்பிடாமல் வேலைக்கு செல்வார்கள். அப்படி செய்தால் உடல் நலன் வெகுவாக பாதிக்கும்.இட்லி, அவல் போன்ற மிகவும் லேசான உணவு வகைகளை இரவு உணவாக எடுத்து கொள்ளுங்கள். இதனால் தூக்கம் வருவதை தவிர்க்கலாம்.


ஆனால் கூடவே கொஞ்சம் காய்கறிகளை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அசிடிட்டி தொல்லைகள் வரும்.


எண்ணையில் பொரித்த பதார்த்தங்களை இரவு நேரங்களில் தவிர்த்து விடுங்கள்.இரவில் விழித்திருப்பதற்காக அடிக்கடி காஃபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு கேடானது. இதற்கு பதிலாக அடிக்கடி நீர் பருகியபடியோ அல்லது பழரசங்களை அருந்தியபடியோ இருந்து பாருங்கள். அதன் வித்யாசம் உங்களுக்கே தெரியவரும்.


இரவு நேரங்களில் பசி எடுப்பது மிக சாதாரண விஷயம்தான். அந்த நேரங்களில் ஆரோக்கியம் தர கூடிய வறுத்த பாதாம் , ஆளிவிதைகள், நிலக்கடலை, உப்புமா அல்லது அவள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பிஸ்சா பர்கர் போன்றவை சாப்பிட கூடாது. காரணம் அது உங்கள் எடைக்கு நல்லதல்ல.உங்கள் உணவில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதும் அவசியம். ஆகவே உண்ணும் உணவு மிக கலர்புல்லாக இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள். பச்சை நிற காய்கறிகள், ஆரஞ்சு நிற காய்கறிகள், மஞ்சள், ஊதா என உங்கள் தட்டு நிறங்களால் நிரம்பி இருக்கட்டும்.


இந்த குறிப்புகள் உங்கள் இரவு நேர பணி மூலம் ஏற்படும் ஆரோக்கிய கேடுகளை போக்கும் என்று நம்புகிறோம். மேலும் உங்களிடம் ஏதேனும் இதுபற்றிய குறிப்புகள் இருப்பின் உங்கள் கமெண்ட்கள் மூலம் எங்களுக்கு தெரியப் படுத்துங்கள்.


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.