கொல்லி மலை… இந்த ஊரின் பெயரிலேயே மரணத்தின் அதிர்வுகள் நிரம்பி இருக்கின்றன. கொல்லி பாவை எனும் பல ஆயிரம் வருடத்து அம்மனை சித்தர்கள் உருவாக்கினார்கள். தவறானவர்களை அழிக்கும் சக்தி இந்த அம்மனுக்கு இன்றும் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
கொல்லிப்பாவை தான் இப்போது எட்டுக்கை அம்மனாக அருள்பாலிக்கிறார்கள் என்பது அங்கிருப்போர்களின் கூற்று. தமிழர்களின் பெருமை சித்தர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு பின்னரே வேறு யாராக இருந்தாலும் வரிசைப்படுத்த முடியும்.
தங்களுடைய மந்திர சக்தியினால் மனிதர்களால் முடியாத காரியங்களையும் முடிப்பதில் அவர்களுக்கு விசேஷ சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வரும் ஊராகவே கொல்லி மலை (kolli hills) இருக்கிறது.
Youtubea
கொல்லி மலைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருந்தாலும் கொல்லிப்பாவையின் அருள் இல்லாமல் அங்கே செல்ல முடியாது என்பதே உண்மை. 72 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலை கொல்லி மலை. ட்ரக் மற்றும் பேருந்துகள் செல்ல அனுமதி கிடைப்பதில்லை என்கிறார்கள். சேந்தமங்கலம் எனும் ஊரில் இருந்து பேருந்து வசதி உண்டு.
பெரும்பாலும் பாதுகாப்பான பயணத்திற்கு ட்ராவல்ஸ் மூலம் செல்லலாம். அல்லது சொந்த வாகனங்களில் செல்லலாம். வழியெங்கும் இயற்கையின் பேரழகை தரிசிக்க நீங்கள் விரும்பினால் காலை ஆறு மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து உங்கள் பயணத்தை தொடங்கலாம். அல்லது மாலை 4மணிக்கு தொடங்கினால் சூரிய அஸ்தமனம் அழகாக தெரியும்.
பனி மூடிய பாதைகளில் மலையேறும் வண்டிகளுக்கு வழி விடுகிறது மேலிருந்து இறங்கும் வாகனங்கள். இப்படியான ஒழுங்குமுறை இல்லாவிட்டால் விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் ஆகலாம். இரு சக்கர வாகன ஓட்டிகளை ஆங்காங்கே காண முடிந்தாலும் பெரும்பாலும் கார்களின் எண்ணிக்கை இங்கே அதிகம்.
Youtube
செம்மேடு எனும் இடம் கொல்லிமலையின் நடுமத்தி என சொல்லப்படுகிறது. இங்கேதான் கடைகள் இருக்கின்றன, தங்குமிடங்கள் அரசு அல்லது தனியார் என அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். நான் காரில் சென்றிருந்ததால் முதலில் கோயில் பின்னரே தங்குமிடம் என முடிவு செய்து விட்டேன்.
கொல்லிப்பாவை மற்றும் அறப்பளீஸ்வரர் கோயில்கள் இங்கே பிரபலமானவை. இதனை தவிர பெரியண்ணன் கோயில் ஒன்றும் உள்ளது. மிக அமானுஷ்யமான விஷயங்கள் இங்கேதான் நடப்பதாக சொல்லப்படுகிறது.
அறப்பளீஸ்வரர் கோயிலை அடைந்த போது சனிப்பெயர்ச்சி என்பதால் நந்தி தேவருக்கும் இறைவன் அறப்பளீஸ்வரருக்கும் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் குளிர் ஆரம்பிக்க தொடங்கினாலும் இறைவனின் வெதுவெதுப்பான அருகாமை நம்மை எல்லாவற்றையும் மறக்க செய்கிறது.
Youtube
மிக நிதானமாக பாரம்பரிய முறையில் இங்கே அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. நந்தி சிவன் முகத்தை மறைக்காவண்ணம் மக்கள் நிற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இறைவன் தொண்டு செய்யும் நபரே சமஸ்க்ருதத்திலும் பின்னர் தெளிவான சுத்த தமிழிலும் தேவாரம் சிவபுராணத்தை கணீரெண்ற குரலில் வாசிக்கும்போது கேட்கும் காதுகளோடு இதயமும் இறைவன் பெருமையில் மயங்கி கிறங்குகிறது.
அதன் பின்னர் அங்கிருந்து கொல்லிமலை அம்மனாக இருக்கும் எட்டுக்கை அம்மனை வணங்க சென்றோம். மிக சிறிய கோயில் என்றாலும் பல அமானுஷ்யங்களை தன்னுள்ளே இக்கோயில் கொண்டுள்ளதாக உணர முடிகிறது. இந்தக் கோயிலில் வந்து என்ன வேண்டினாலும் மூன்று மாதங்களில் நடந்து விடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இங்கே நல்லது கெட்டது என இரண்டுமே நடக்கிறது. அதனால் தனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வருபவர்களும் உண்டு அடுத்தவர்களுக்கு கெடுதல் நடக்க வேண்டும் என்று வருபவர்களும் உண்டு. வசியம் என்பது அமானுஷ்ய மாந்திரீகத்தில் முக்கிய சொல்.
Youtube
இந்த வசியத்தை எட்டுக்கை அம்மன் கோயிலில் சர்வ சாதாரணமாக செய்கின்றனர். தனக்கு பிடித்த நபரின் ஆடையையும் தன்னுடைய ஆடையையும் இங்கே ஒன்றாக வைத்து கட்டிவிட இவர்கள் இருவருக்கும் தீராத பிணைப்பு ஏற்பட அம்மன் அருள்பாலிக்கிறார். இதனால் அறியாமல் யாரோ ஒருவரின் விருப்பத்துக்கு பலியாகும் உயிர்களும் இங்கே இருக்கின்றன.
பெரும்பாலும் தொழில் வசியம் இங்கே அதிகமாக நடைபெறுகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப எண்ணிக்கையில் கடா வெட்டி அம்மனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். எட்டுக்கை அம்மன் சைவம் தான். ஆனால் கீழே 10 கை அம்மனுக்கு இவ்வகை சடங்குகள் நடைபெறுகின்றன.
நாங்கள் சென்றிருந்த சமயத்தில் கூட இரண்டு ஆடுகள் வெட்டப்பட்டு பலி கொடுக்கப்பட்டது. பூசாரிகள் நியமமாக பயபக்தியுடன் பூசை செய்கின்றனர். உடுக்கடித்து பாடும் பாடல்களில் வெளியாகும் அதிர்வுகள் கேட்கும் நெஞ்சங்களில் நேரே சென்று இறங்குகிறது.
Youtube
இங்கே பல சித்தர்கள் வாழும் மலை என்பதால் இங்கே கோடிக்கணக்கில் கிடைக்கும் மூலிகைகளை திருட யாரேனும் வருவார்கள் என்பதால் சித்தர்களால் செய்யப்பட்டவர் தான் இந்தக் கொல்லிப்பாவை. இன்றும் சித்தமருத்துவத்தில் மூலிகைகளுக்காக இங்கே வருபவர்கள் அம்மனிடம் சம்மதம் பெற்ற பின்னரே தாங்கள் தேடி வந்த மூலிகைகள் தென்படுவதாக சொல்கின்றனர்.
இங்குள்ள குகைகளில் இன்றும் சித்தர்கள் அரூபமாக இருக்கின்றனர். கூடு விட்டு கூடு பாய்கின்றனர் என்கின்ற செய்திகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இங்கே கிடைக்கும் ஒருவித மூலிகையை உட்கொண்டால் நாம் காணாமல் போய் விடுவோம். அதன் பின்னர் யார் கண்ணுக்கும் தெரியாமல் அமைதியாக தவம் இயற்ற முடியும். அப்படியான சித்தர்கள் இங்கே அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்னும் இங்கே பார்ப்பதற்கு ஆகாய கங்கை அருவி இருக்கிறது. மேலும் சில அருவிகள் இருக்கின்றன. போட்டிங் உண்டு. உங்கள் அரையாண்டு விடுமுறையை இந்தமுறை கொல்லி மலையில் கழியுங்கள். சித்தர்களின் அருளாசியோடு வாழ்வின் தடங்கல்களை முறியடிக்க கொல்லிமலை அம்மன் அருள்வார்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!