இன்றைய தேதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் மட்டுமல்ல வீட்டிற்குள்ளே இருந்தாலும் தூசி அழுக்கு போன்ற பல விஷயங்கள் நம் அழகை கேள்விக்குறி ஆக்குகிறது. தூய்மையற்ற காற்று நம்மை சுற்றிலும் தற்போது பரவி இருக்கிறது. இதனால் நமது சரும ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகிறது.
அதனையும் தாண்டி தினமும் பணிக்காக படிப்புக்காக என வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும் பெண்களுக்கு தூசு, புகை மற்றும் வெயிலால் பல சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் முக்கியமானது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் (dark spots) . ஒரு சிலருக்கு பருக்கள் தந்த தழும்புகள் இருக்கும். ஒரு சிலருக்கோ நிறமி சரியாக இல்லை என்றால் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் தோன்றும்.
இதனால் முகத்தின் அழகு விகாரம் ஆகும். நம்மால் தன்னம்பிக்கையுடன் புன்னகைக்க முடியாமல் போகலாம். இதனை நீங்கள் பார்லருக்கு அல்லது ஸ்கின் ட்ரீட்மெண்ட் சென்று சரி செய்வதற்கு பல ஆயிரங்கள் செலவாகலாம். அதனை வீட்டில் இருந்தே குறைந்த செலவில் நீங்களே சரி செய்து கொள்ள முடியும்.
கரும்புள்ளி ஏற்படுவதற்கான காரணங்கள்
சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் நேரடியாக நம் முகத்தில் பாய்வதால் கரும்புள்ளிகள் விஷ்வரூபம் எடுக்கின்றன, உங்கள் சருமத்தில் மெலனின் (melanin) உற்பத்தி அதிகரிப்பதால் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.
ஹார்மோன் சமநிலை இல்லாமல் போகும் சமயங்களில் இந்த கரும்புள்ளிகள் தோன்றலாம். அதனால் தான் மெனோபாஸ் நேரங்களில் பெண்களுக்கு கன்னங்கள் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் மங்கு (pigmentation) போன்றவை உண்டாகின்றன.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக சிலருக்கு கரும்புள்ளிகள் ஏற்படலாம். ஸ்ட்ரிராய்ட் மருந்துகளுக்கு நிச்சயம் கரும்புள்ளிகள் வரும். காரணம் இவை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கரும்புள்ளியின் வகைகள்
Melasma – இது கரும்புள்ளி வகைகளில் முதன்மையானது. ஹார்மோன் சமமின்மை காரணமாக ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் மற்றும் மெனோபாஸ் நேரங்களில் இது ஏற்படுகிறது.
Lentigines – அளவுக்கதிகமான சூரிய வெப்பத்தின் நேரடிதாக்கத்தால் இந்த கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. இதனை பெரும்பாலும் 60 வயதிற்கு மேலானவர்களிடம் பார்க்க முடியும்.
Post-inflammatory hyperpigmentation – இது சருமத்தில் ஏற்படும் காயங்களால் வரும் கரும்புள்ளிகள். பருக்கள் காயங்கள் போன்றவை இதில் அடங்கும்.
வீட்டிலிருந்தே கரும்புள்ளிகளை சரி செய்ய குறிப்புகள்
நான் ஏற்கனவே சொன்னபடி பார்லர் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உங்கள் முக அழகை மேம்படுத்த முடியும். கரும்புள்ளிகளை நீக்கி மீண்டும் பழையபடி பொலிவான முகத்தையும் தன்னம்பிக்கையையும் நீங்கள் பெற முடியும். நீங்கள் செய்ய வேண்டியது அடிக்கடி உங்கள் முகத்தை கீழ்கண்ட முறைகளில் கவனித்து வர வேண்டும். சில நாட்களில் உங்கள் அழகு திரும்ப கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாறு
முகத்தில் உள்ள மங்கு மற்றும் கரும்புள்ளிகள் மறைவதற்கும் கண்களில் உள்ள கருவளையங்களை போக்குவதற்கும் உருளைக்கிழங்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு இயற்கையான ப்ளீச் என்பது எல்லோரும் அறிய வேண்டிய ரகசியம்.
உருளைக்கிழங்கை வட்ட வடிவமாக வெட்டி அதனை முகத்தில் முழுவதுமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது உருளைக்கிழங்கை நன்றாகத் துருவி பிழிந்தால் சாறு கிடைக்கும். அதனை பஞ்சில் தொட்டு முகம் முழுதும் ஒற்றிக் கொள்ளலாம். மூன்றாவதாக உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அடித்து அந்த கலவையுடன் வைட்டமின் ஈ எண்ணையை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
இதனை வாரம் மூன்று முதல் நான்கு முறை செய்து வந்தால் ஒரே மாதத்தில் கரும்புள்ளிகள் நீங்கி முக அழகிற்கு நல்ல தீர்வு ஏற்படும்.
கற்றாழை சாறு
கற்றாழையின் பலன்களை அதிகம் படித்திருப்பீர்கள். கற்றாழையை எடுத்து நன்றாக நீரில் அலசி விட்டு பக்கவாட்டு முட்களை சீவி எடுக்க வேண்டும். அதன்பின்னர் அதனை இரண்டாக வெட்டினால் உள்ளே ஜெல் போன்ற ஒரு பொருள் வரும். அதனை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.
இதனை உங்கள் முகத்தில் நன்றாக தடவவும். உங்கள் முகத்தில் ஏற்படும் எந்தவித நோய்களையும் நீக்கி விடும். முகத்தில் தடவியதும் இதமாக உணர்வீர்கள். அது உங்கள் முக சருமத்தின் காயங்களை ஆற்றுப்படுத்துவதால் அந்த இதமான உணர்வு எழுகிறது. இப்படி தொடர்ந்து 15 நாட்கள் செய்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஒரு ப்ளீச் தன்மை கொண்ட பொருள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உங்கள் சருமத்தை இளமை பொலிவோடு இருக்க வைக்கிறது.
ஒரு நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறை நான்கு ஸ்பூன் தண்ணீரில் கலக்கவும். இந்த தண்ணீரில் பஞ்சை நனைத்து முகம் முழுதும் ஒற்றி எடுக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வர உடனடியாக பளிச்சென்ற முகம் உங்கள் வசப்படும். பார்ப்பவர்கள் அதிசயப்படும் அளவிற்கு வித்யாசங்கள் இருக்கும்.
வறண்ட சருமத்தினர் எலுமிச்சை சாறு கலவையோடு சில துளி ஆலிவ் எண்ணெய் விடலாம். அல்லது வைட்டமின் ஈ எண்ணெய்யை விடலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் கரும்புள்ளிகளை நீக்குவதில் ஆபத்பாந்தவனாகவே செயல்படுகிறது. நிரந்தரமான தெளிவான முகமும் ஒரே நிற சருமமும் உங்களுக்கு கிடைக்க ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துங்கள்.
ஆப்பிள் சைடர் வினீகருடன் சம அளவு நீர் கலந்து கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் என்றால் இரண்டு ஸ்பூன் நீர் எடுத்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை டோனர் போல உபயோகியுங்கள். பஞ்சில் தொட்டு முகம் முழுதும் ஒற்றி எடுத்து 20 நிமிடம் உலரவிட்டு கழுவி வாருங்கள். உடனடி பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
கரும்புள்ளிகளை நீக்க தேங்காய் எண்ணையா என்று கேட்காதீர்கள். அதில் உள்ள ஆன்டி பேக்டீரியல் தன்மை உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை லேசாக்கி மறைய செய்கிறது. மேலும் பரவாமல் தடுக்கிறது. கொஞ்சம் சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் வட்ட வடிவமாக தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். முடிந்தால் சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ்
ஓட்ஸ் முகத்தில் உள்ள நிறத்தை சீராக்கவும் நிறத்தை மேம்படுத்தவும் பயன்படும். ஓட்ஸ் உடன் தயிர் கலந்து கொள்வதால் உங்கள் கரும்புள்ளிகள் வெகு விரைவில் மாயமாகும். ஒரு ஸ்பூன் உடைத்த ஓட்ஸ் உடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்தக் கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பளிச்சென்ற முகம் கண்ணாடியில் உங்களை சந்தோஷப்படுத்தும்.
பப்பாளி பழம்
பப்பாளிப்பழம் பொதுவாகவே முக அழகிற்கு பயன்படுத்தப்படுகிறது. பார்லர்களில் கூட ஆரம்ப காலங்களில் இவைதான் பழ பேசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. பப்பாளி பழம் கரும்புள்ளிகளை நீக்கும் தன்மை கொண்டது.
பப்பாளிப்பழத்தை சாறு எடுத்து வைத்துக் கொண்டு அதனை பஞ்சினால் முகம் முழுதும் ஒற்றி எடுக்கவும். பின்னர் உலர வைத்துக் கழுவி விடவும். பப்பாளிப்பழத்தை நன்றாக பிசைந்து அந்த சதையை முகம் முழுதும் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்றவை மறைந்து முகம் பொலிவாக மாறும்.
சந்தனம்
சந்தனம் அற்புதமான ஒரு மூலிகை. பல நோய்களுக்கு குணமாகும் சந்தனம் உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் அழற்சியை நீக்க உதவுகிறது. சந்தனத்தை பொடி செய்து அதனை முகத்தில் தடவி வந்தால் நீண்ட நாட்கள் அழற்சி காரணமாக முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளைக் கூட நீக்கி விடும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தனப்பொடியுடன் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம். அல்லது வைட்டமின் ஈ எண்ணெய் சேர்க்கலாம். இதனால் கரும்புள்ளிகள் வெகு விரைவாய் மறைந்து விடும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் மூலப்பொருள் சருமத்திற்கு தேவையான கொலாஜனை இயற்கையாகவே உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இது உங்கள் கரும்புள்ளிகளை நிறமிழக்க செய்வதால் முகம் பளிங்கு போல மின்னும்.
கொஞ்சம் மஞ்சளை எடுத்து அதனுடன் நீர் விட்டு குழைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அலசி விடவும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் லேசாக தொடங்கும். மஞ்சள் ஒவ்வாமை இருப்பவர்கள் பால் உடன் சேர்த்து குழைத்து பூசலாம். விரலி மஞ்சள் தான் அழகுக்கு உத்திரவாதம் தரும்.
ஜாதிக்காய்
வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது. வெயிலால் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க ஜாதிக்காய் சிறந்த மருந்து. ஜாதிக்காயை பொடி செய்து அதனை சிறு துளிகள் எடுத்து நீருடன் கலந்து முகத்தில் பூசி உலர விட்டு கழுவுங்கள்.
ஜாதிக்காய் எண்ணெய் விற்கிறது. அதனை வாங்கி இரண்டு துளிகள் சேர்த்து அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் விடவும். இவற்றை முகம் முழுதும் வட்டவடிமாக தடவி பின்னர் 20 நிமிடம் கழித்து முகம் கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.
கொத்தமல்லி சாறு
இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் இளமையையும் தக்க வைக்கிறது. இதனை உங்கள் முகத்தில் உபயோகம் செய்வதால் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உதவியுடன் உங்கள் முகம் படு இளமையாக காட்சி அளிக்கும்.
கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை எடுத்து மிக்சியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை பஞ்சு மூலம் நனைத்து முகம் முழுதும் தடவி உலர விட்டு பின்னர் கழுவி விடுங்கள். தொடர்ந்து ஒரு 20 நாட்கள் இப்படி செய்து வர நல்ல பலனை காண்பீர்கள்.
வெள்ளரி சாறு
முகத்தின் நிறத்தை மேம்படுத்துவதிலும் கருவளையங்களை போக்குவதிலும் வெள்ளரிக்காய் சிறப்பான பலன்களை கொடுக்கிறது. சிலிகா அதிகமாக இருப்பதும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதும் வெள்ளரிக்கான கூடுதல் பலன்கள்.
வெள்ளரிக்காயை துருவி அதில் நீரை வடித்து எடுத்து இந்த நீரை பஞ்சில் தொட்டு முகம் முழுதும் ஒற்றி 20 -30 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் முகம் கழுவ வேண்டும். அல்லது வெள்ளரிக்காயை அரைத்து அந்த சாறை அப்படியே முகத்தில் தடவலாம். இப்படி தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுக்கள் ஆகியவை மறைந்து கூடிய சீக்கிரமே முகம் கண்ணாடி போல மினுமினுக்கும்.
கரும்புள்ளிகள் வராமல் காப்பதற்கான குறிப்புகள்
இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் சரி செய்த கரும்புள்ளிகளை மீண்டும் உங்கள் முகத்தில் வரவிடாமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
சன்ஸ்க்ரீன் லோஷன் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். 40SPF இருப்பதாக பார்த்து வாங்குவது நலம். வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் முகத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன் இருக்க வேண்டும், மிகப்பெரிய குளிர்கண்ணாடிகள் அணிவது உங்கள் முகத்தை வெயிலில் இருந்து காக்கும்.
பருக்கள் சோரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு தேவையான மருத்துவத்தை செய்வது உங்களுக்கு கரும்புள்ளிகள் மீண்டும் வராமல் தடுக்கும் வழிகள் ஆகும்.
அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்
என் முகத்தில் கருப்பாக இருக்கும் சின்ன சின்ன வீக்கங்கள் என்ன?
முக சருமத்தின் அடியில் கெரட்டின் சத்துக்கள் அடிபடும் சமயம் இந்த மாதிரியான மச்சமும் இல்லாத மருவும் இல்லாத சில கரும்புள்ளிகள் லேசான உப்பலுடன் தோன்றலாம்.
ஒரு சரும மருத்துவர் என் கரும்புள்ளிகளை நீக்கி விடுவாரா?
கரும்புள்ளிகளை நீக்க மருத்துவர் அவசியம் இல்லை. ஆனால் ஒரு சிலர் அழகு குறித்த கவனத்துடன் இருக்க வேண்டி வருவதால் அதற்கு சரும மருத்துவர் உதவியை நாடுகின்றனர். உங்கள் உடலில் எவ்வளவு தூரம் கரும்புள்ளி பரவி இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.
ஸ்ட்ரெஸ் ராஷ் என்பது என்ன ?
தேனீக்கூடுகளை போல வடிவம் கொண்டிருக்கும் கரும்புள்ளிகள் தான் ஸ்ட்ரெஸ் ராஷ் எனப்படுகிறது. இது உடலின் இந்தப்பகுதியில் இருந்து வேண்டுமானாலும் வரலாம். இவை சிவப்பு நிறத்தில் தடிப்பு தடிப்பாக காணப்படும். பென்சில் முனை சைஸ் முதல் சாப்பிடும் தட்டு சைஸ் வரை இதன் வடிவங்கள் மாறும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!